மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

மதுரை தீ விபத்தில் சதிச்செயலா?

மதுரை தீ விபத்தில் சதிச்செயலா?

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து சதிச்செயலாகவும் இருக்கலாம் என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன், இன்று (பிப்ரவரி 12) நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பு தற்செயலாக நடக்கவில்லை. அது போலவே, தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கும் சதிச்செயல் காரணமாக இருக்கலாம். இதுபற்றி, தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதை ஒட்டி எழுந்த சர்ச்சையையைப் பற்றியும் அவர் பேசினார். இந்த எதிர்ப்பை நாடகம் என அவர் வர்ணித்தார்.

“அரசு அலுவலகங்கள், விடுதிகளில் ஜெயலலிதாவின் படம் ஏற்கனவே உள்ளது. அதற்கு எந்த வித எதிர்ப்பும் எழவில்லை. அதுபோலவே, தற்போது சட்டமன்றத்தில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை, மறைந்த முன்னாள் முதல்வராகத்தான் பார்க்க வேண்டும். அவரது உருவப்படம் அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வது அரசியல் நாடகம்” என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதிகளை நேற்று இரவு பார்வையிட்டார். தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் மேலும் சில பகுதிகளும் சிதைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது, கோவில் வளாகத்தில் அதிகளவில் கடைகள் இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று கேள்வியெழுப்பினார்.

“மதுரை ஆயிரங்கால் மண்டபம் எரிந்திருந்தால், தமிழகத்தின் புராதன பொக்கிஷங்களில் ஒன்று அழிந்திருக்கும். விபத்து ஏற்பட்ட பகுதியில் 42 கடைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் கடைவீதி இருக்கும்போது, கோவிலுக்குள் இத்தனை கடைகள் எதற்காக உள்ளன? பூஜைக்குத் தேவையான பொருட்களை இந்து அறநிலையத் துறையே குறைந்த விலையில் விற்கலாம்.

ஆலயங்களைச் சந்தைகளாக மாற்றக் கூடாது. தமிழகத்திலுள்ள மற்ற கோவில்களிலும் கடைகள் அமைக்கப்பட, அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார். இந்தத் தீவிபத்து தொடர்பாக வெளி அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon