மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கார்த்தி சிதம்பரம் வழக்கு: பிப். 16ல் தீர்ப்பு!

கார்த்தி சிதம்பரம் வழக்கு: பிப். 16ல் தீர்ப்பு!

வெளிநாடு செல்ல அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவருடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக முதலீட்டை ஐஎன்எக்ஸ் மீடியாவுக்குப் பெற்றதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து நேரில் ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவரது அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்தைத் தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம் எனத் தெரிவித்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். அவரது வழக்கைத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கார்த்தியின் மனுவுக்கு மத்திய அரசு மற்றும் சிபிஐ தரப்பில் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் ஆஜராகியிருந்தார். அதேபோல், ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

சிபிஐ தரப்பில் கர்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் வெளிநாடு சென்றால் சாட்சிகளை அழித்துவிடுவார் என்றும் சிபிஐ தனது வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து, இவ்வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon