மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

களத்தில் இறங்கிய பிரியா வாரியர் ஆர்மி!

களத்தில் இறங்கிய பிரியா வாரியர் ஆர்மி!

தமிழ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு உடனடியாக சமூக வலைதளங்களில் ஆர்மி ஆரம்பித்துக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். யாருக்கெல்லாம் தமிழ் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பிக் பாஸ் ஓவியா, ஜிமிக்கி கம்மல் ஷெரிலைத் தொடர்ந்து தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் பிரியா வாரியர். தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவியை நம் ரசிகர்கள் ரசிக்கவில்லையா என்றால் அவரும் மலையாளப் படமான பிரேமம் மூலம்தானே ரசிகர்களைப் பெற்றார் என வாயடைக்க வைத்துவிடுகின்றனர்.

மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், சங்ஃஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது ஒரு அதாரு லவ் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெறும் பாடலின் வீடியோ ஒன்றை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. மாணிக்ய மலராய பூவி எனத் தொடங்கும் அந்தப் பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்.

அந்தப் பாடலில் ஒரு பள்ளியில் நடக்கும் கலைநிகழ்ச்சியின்போது தனது நண்பனைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வைதான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவாக உள்ளது. வார்த்தைகள் ஏதுமின்றி நளினத்துடன் அவர் புருவங்களை அசைத்து தமிழ் ரசிகர்களையெல்லாம் தன் பக்கம் இழுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ப்ரியா வாரியருக்கென தற்போது ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது. 4 நாட்களில் இந்த வீடியோவை யூ ட்யூபில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். ப்ரியாவின் காட்சியை மட்டும் எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எனப் பகிர்ந்துவருகின்றனர். அந்தப் புகைப்படத்தை எடுத்து மீம்ஸ்களும் வெளியாகின்றன. சமூக வலைதளங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அவரது பெயரில் போலி கணக்குகளையும் தொடங்கியுள்ளனர்.

பாடலுக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்துள்ள இந்த வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மாணிக்ய மலராய பூவி பாடல்

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon