மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

வேளாண் நிழல் பட்ஜெட்: பாராட்டத்தக்க பாமக!

வேளாண் நிழல் பட்ஜெட்: பாராட்டத்தக்க பாமக!

பாமகவின் நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கையை மருத்துவர் ராமதாஸ் நேற்று (பிப்ரவரி 11) கோவையில் வெளியிட்டார்.

கடந்த 2003-04ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பாமகவின் சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் தமிழகத்துக்கு என்னென்ன நலத்திட்டங்கள் தேவை, அதற்கு எவ்வளவு செலவாகும், திட்டத்தால் எவ்வகையில் மக்கள் பயனடைவார்கள், பிரச்னைகளுக்கு அதன் தீர்வுகளும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கும். மேலும், 2008ஆம் ஆண்டு முதல் வேளாண் துறைக்கென தனியாகவும் நிழல் பட்ஜெட்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று கோவையில் வெளியிட்டார்.

பல்வேறு திட்டங்கள் அடங்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க, பாராட்டத்தக்க அம்சங்கள் பின்வருமாறு...

1.கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் உழவர்களை விடுவித்தல்.

2.கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தருதல்.

3.விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

4. 2018-19 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,811 என நிர்ணயிக்கப்படும்.

5.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசின் அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. அத்திட்டத்திற்கு நெடுவாசல் மக்களும், உழவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

6.தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும்

7.வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்களை வாங்க வசதியாக சிறு, குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு, பருவத்திற்கு ரூ.5,000வீதம் மூலதன மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நடப்பாண்டில் ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.43,000கோடியாக இருக்கும்.

8.தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் “நீரா” மருத்துவ குணம் கொண்டது என்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளது. எனவே, நீராவை இறக்கி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

9.ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் வழங்கப்படும். இதை அப்பகுதி விவசாயிகள் தங்களின் தேவைகளுக்காக வாடகையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

10.தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த அறிக்கைக்காக செலவிடப்பட்ட உழைப்பு, அக்கறை, ஆர்வம் ஆகியவை பாராட்டத்தக்கவை.

இந்த நிதிநிலை அறிக்கையின் வெளியீட்டுக்குப் பிறகு பேசிய மருத்துவர் ராமதாஸ், நிழல் நிதி அறிக்கையில் அரசுக்கு 266 யோசனைகள் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், வேளாண்மை துறை சார்ந்த பணிகளைக் கவனிக்க நான்கு அமைச்சகங்கள் தேவை. ஆனால், தமிழக அரசு இதனை ஏற்காது என்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெட்கப்பட வேண்டிய நாள், ஜெயலலிதாவின் படத்திறப்பு நாளாகும் என்றும் கூறியுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon