மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

கணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

லஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகராகச் செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதேபோல், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அவரை அடைத்துள்ளனர். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதியை இடைநீக்கம் செய்தும் ஆளுநர் அறிவித்தார்.

ஜாமீன் கோரி கணபதி, தர்மராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவையும் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 9ஆம் தேதி நீதிபதி ஜான்மினு விடுமுறை என்பதால் இந்த மனு 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. துணைவேந்தரைக் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணைக்குக் கணபதி தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜான்மினு, கணபதியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதியளித்தார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon