மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சூடுபிடிக்கும் இலந்தை சாகுபடி!

சூடுபிடிக்கும் இலந்தை சாகுபடி!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பச்சை ஆப்பிள் என்றழைக்கப்படும் தாய்லாந்து வகை பெரிய இலந்தை பழங்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

இவை வெப்பம் அதிகமுள்ள தரிசு நிலங்களில் விளையக்கூடியவையாகும். பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலந்தை வகை தற்போது நெல்லூரில் பயிரிடப்படுகிறது. சென்ற வருடத்தில் 15 ஏக்கர் பயிரிடப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.50 என்ற விலைக்குப் பெரிய இலந்தைப் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் வணிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இப்பழங்கள் தோட்டக்கலை துறையினர் ஆதரவோடு நெல்லூரில் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. இந்தியாவில் முதலில் ஹைதராபாத்தில் பயிரிடப்பட்ட இப்பழங்கள் துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன், எடையில் 150 கிராம் முதல் 200 கிராம் வரையும் இருக்கும்.

இவை பயிரிடப்பட்டு 6 முதல் 8 மாதங்களில் பூ பூக்கும். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 செடிகள் வரை பயிரிட முடியும். வருடத்திற்கு இரண்டு முறை பழங்கள் தரக்கூடியவை இவ்வகைச் செடிகள். இந்த இலந்தைப் பழங்களில் உடலுக்குத் தேவையான 18 முதல் 24 வகை அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. நரம்பியல் நோய்களுக்கும் இப்பழங்கள் பயன்படும் என்பதற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதாகச் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மகேஷ், ஹன்ஸ் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிக பயன்கள் நிறைந்த இப்பழங்கள் தற்போது பெருமளவில் பயிரிடப்படுகின்றன.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon