மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தள்ளிப்போன முதலீட்டாளர்கள் மாநாடு!

தள்ளிப்போன  முதலீட்டாளர்கள் மாநாடு!

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2015ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் வந்திருந்தார்கள். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டதாகத் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் , ஒரு வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஐந்து மாதத்துக்குள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 12) தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் , இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு தனி அதிகாரியாக அருண்ராய் அவர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனவே, ஐந்து மாதத்திற்குள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மாநாடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிபோயிள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon