மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சட்டமன்றத்தில் ஜெ. உருவப்படம் திறப்பு!

சட்டமன்றத்தில் ஜெ. உருவப்படம் திறப்பு!

தமிழக சட்டமன்றத்தில், இன்று (பிப்ரவரி 12) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறந்துவைத்தார் சபாநாயகர் தனபால்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் அமைக்கப்படுமென்று, கடந்த வாரம் அறிவித்தது தமிழக அரசு. ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டவரின் படத்தைச் சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன எதிர்கட்சிகள். இந்த நிலையில், இன்று காலையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்புவிழா தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். சட்டமன்றத்தில் திமுகவினர் அமரும் இடங்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

படத்தைத் திறந்துவைத்துப் பேசிய சபாநாயகர் தனபால், தனியொருவராகப் போராடி பல சாதனைகள் படைத்தவர் ஜெயலலிதா என்று பாராட்டினார். மேலும், தனக்குக் கிடைத்த எல்லா உயர்பதவிகளுக்கும் அவரே காரணம் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது என்று தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ”தமிழ் மக்களால் அம்மாவும், அம்மாவினால் தமிழக மக்களும் வளர்ந்தார்கள். பல சோதனைகளைக் கடந்து, 6 முறை அவர் தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். தனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல், தமிழகத்தின் நலனே தன்னலன் என வாழ்ந்தார். பூமி உள்ளவரை அவரது புகழ் இருக்கும். அவருக்கு பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.

தனியொருவராக சிங்கம் போல சட்டமன்றத்தில் கர்ஜித்தவர் ஜெயலலிதா என்று கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று அவர் நன்கு தெரிந்தவர் என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்த நிகழ்வை திமுக, காங்கிரஸ் கூட்டணி புறக்கணித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் மற்றும் கருணாஸ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் உருவப்படம், சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. 5 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்ட இந்த உருவப்படத்தை சென்னை கவின்கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். இந்த உருவப்படத்தின் கீழ்ப்பகுதியில் அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத்தேவர், காயிதேமில்லத், எம்ஜிஆர் ஆகியோரது படங்கள் சட்டமன்றத்தில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தன. இந்த வரிசையில் 11வதாக ஜெயலலிதாவின் உருவப்படம் சேர்ந்துள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon