மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா - காதலர் ஸ்பெஷல்: பழக்கலவை தயிர் சாதம்!

கிச்சன் கீர்த்தனா - காதலர் ஸ்பெஷல்:  பழக்கலவை தயிர் சாதம்!

காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைக் காதலர் தின ஸ்பெஷலாக இனிவரும் நாள்களில் சமைக்கலாம். எத்தனை மருத்துவப் பொருள்களை உட்கொண்டாலும் இயற்கையான பழங்களும் காய்கறிகளும் கொடுக்கும் சத்துக்கு ஈடாகாது. காதல் உணர்வைத் தூண்டக்கூடிய அத்திப்பழம், வாழைப்பழம் வரிசையில் முக்கியமானது மாதுளம்பழம். திருமணமான பெண்களுக்குக் கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ஈ மாதுளம்பழத்தில் அதிக அளவில் உள்ளது. ஒரு குவளை புதிய மாதுளைப் பழச்சாற்றில் 1.8 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் மதிப்புகளில் 14 சதவிகிதம் வைட்டமின் ஈ சத்தைக்கொண்டுள்ளது. இத்தனை சத்துகள் அடங்கியுள்ள மாதுளையையும் மற்ற பழங்களையும் கொண்டு தயிர் சாதம் செய்வோமா?

தேவையானவை:

அரிசி - கால் கிலோ

திராட்சை - 100 கிராம்

மாதுளம் முத்துகள் - ஒரு கப்

வாழைப்பழம், ஆப்பிள் - தலா ஒன்று

புளிக்காத தயிர் - ஒரு கப்

முந்திரி - 10.

செய்முறை:

அரிசியைக் குழைய வடித்து, தயிர்விட்டு நன்கு பிசைந்துக்கொள்ளவும். அதில் நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளம் முத்துகள் கலந்து, அதன் மேல் முந்திரியை வறுத்துத் தூவி பரிமாறவும்.

குறிப்பு: குழந்தைகளுக்கு விருப்பமான பழங்கள் எதுவாயினும் தயிர் சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.

அடடா... மாதுளம்பழம் மீந்து போய்விட்டதே எனக் கவலை வேண்டாம். அதையும் ஜூஸ் போட்டுவிடலாம்.

தேவையானவை:

மாதுளம்பழம் - மூன்று

சர்க்கரை - 4 டீஸ்பூன்

செய்முறை:

மாதுளம்பழத்தைத் தோல் உரித்து உதிர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்துக்கொடுக்கவும்.

குறிப்பு: தினம் ஒரு மாதுளம்பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால், வைட்டமின் குறைபாடு வராது. உடல் உஷ்ணமும் தணியும்.

பெரும்பாலும், பழவகைகளை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது. ஆனால், சில பழங்களோடு சர்க்கரை, பசும்பால் ஆகிவற்றை சேர்க்கும்போது கூடுதல் சத்துகளும் கிடைக்கின்றன.

கீர்த்தனா சிந்தனைகள்:

கல்யாணம் ஆகும் வரைதான் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள் காதலர்கள்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon