மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

மீனாட்சியம்மன் கோவில்: பொறியாளர் குழு ஆய்வு!

மீனாட்சியம்மன் கோவில்: பொறியாளர் குழு ஆய்வு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் தனியார் பொறியாளர் வல்லுநர் குழு நேற்று (பிப்ரவரி 12) ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2ஆம் தேதியன்று ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரம் கால் மண்டபம் அருகே சுமார் 7000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரையும், ஒரு சில கல் உத்தரங்களும் இடிந்துவிழுந்தன. இதனையடுத்து அங்கு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஓய்வு பெற்ற பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான 12 பேர் அடங்கிய வல்லுநர் குழுவினர் முதல் கட்ட ஆய்வை மேற்கொண்டு, சில ஆலோசனைகளைக் கோயில் நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இக்குழுவினர் இரண்டாவது கட்ட ஆய்வைத் தொடங்கவுள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தில் எரிந்துபோன கடைகளின் கழிவுகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் தனியார் பொறியாளர் வல்லுநர் குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டது. பொறியாளர் சரவணன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வுப் பணியைத் தொடங்கினர். டோட்டல் ஸ்டேஷன் கருவி மூலம், தீ பாதித்த பகுதியை அளவீடு செய்தனர். இது தொடர்பாக அக்குழுவினர், "இந்து அற நிலையத் துறையின் உத்தரவின் பேரில், இந்த ஆய்வை மேற்கொள்கிறோம். பூகோள முறையிலான ஆய்வில் கட்டடத்தின் உறுதித்தன்மையையும், பழமை மாறாமல் புதுப்பிக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்துவருகிறோம். இது தொடர்பான அறிக்கையைக் கோயில் நிர்வாகத்திடம் விரைவில் சமர்ப்பிப்போம்" என்று தெரிவித்துள்ளனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon