மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தொண்டர்கள் சொல்பவர்களுக்கே பதவியும் வேலைவாய்ப்பும்!

தொண்டர்கள் சொல்பவர்களுக்கே பதவியும் வேலைவாய்ப்பும்!

அதிமுக தொண்டர்கள் விரல் காட்டுபவர்களுக்கே பதவியும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் ஊடகங்களிலும், பொதுமேடைகளிலும் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதனால்தான் இவர்களை ஜெயலலிதா ஊடகங்களில் பேசக் கூடாது என்று தடை விதித்திருப்பார் போலும் என்று எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சிலர் இந்த இயக்கம் சிதைந்துவிடும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் 100 ஆண்டு காலம் ஆனாலும் அதிமுக என்னும் இயக்கம் நிலைத்திருக்கும். எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சி ஒரு வாரத்தில் கலைக்கப்படும் என்று திமுகவினர் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் ஸ்டாலின் தற்போது இன்னும் எட்டு மாதத்தில் இந்த ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார். எட்டு மாதங்கள் அல்ல, எண்பது ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அவர்களால் அசைத்துப் பார்க்க முடியாது" என்று கூறினார்.

"இரண்டு மாதம் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் தொண்டர்களாகிய உங்கள் ஆட்சிதான் இருக்கும். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் நினைத்த காரியம் அத்தனையும் நிறைவேற்றிக் காட்டப்படும். தொண்டர்கள் சோர்வோடு இருப்பது எதிர்காலத்தில் இருக்காது" என்று குறிப்பிட்ட அவர், "இன்று பல்வேறு திட்டங்களை உங்களை நோக்கிக் கொண்டுவர வேண்டும் என்னும் ஆசை எங்களுக்கு இருக்கிறது. இருந்தபோதிலும் எங்களுக்கு இடர்ப்பாடுகளும் இன்னல்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதைத் தகர்க்கும் சக்தி அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை. இனி நீங்கள் கைகாட்டுபவர்களுக்கே பதவியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதனை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திலேயே பேசியுள்ளோம்" என்றும் செங்கோட்டையன் கூறினார்.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அரசின் திட்டங்களைப் பெற வேண்டும் என்றால் அதிமுக உறுப்பினர் அட்டை கட்டாயம் தேவை என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது, தான் அவ்வாறு கூறவில்லை என்றும், தன்னுடைய பேச்சு தவறாகப் பரப்பப்பட்டுவிட்டதாகவும் ராஜு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon