மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லி விடவா: முதல் மூன்று நாட்கள் வசூல்!

கலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லி விடவா: முதல் மூன்று நாட்கள் வசூல்!

கடந்த வாரம் வெள்ளியன்று (பிப்ரவரி 9) கலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லி விடவா என மூன்று படங்கள் வெளியாகின. முதல் மூன்று நாட்களில் இவற்றின் வசூல் எப்படி?

சவரக்கத்தி

தமிழ் சினிமாவில் தங்களுக்கென்று தனிப் பாணியை அமைத்துக்கொண்ட இயக்குநர்களான மிஷ்கின், ராம் இருவரும் இணைந்து நடித்து, வெள்ளிக்கிழமை வெளியான படம் சவரக்கத்தி. படைப்பு ரீதியாக விமர்சகர்களால் இது வெகுவாகப்பாராட்டப்பட்டது. இருப்பினும் கிராமம், சிறுந்கரம், பெருநகரம் என எந்த வகைப் பார்வையாளர்களையும் சவரக்கத்தி கவரவில்லை. புறநகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்புற தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் வருகை வார இறுதி விடுமுறை நாட்களிலும் குறைவாகவே இருந்தது.முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 14 லட்சம் மட்டுமே வசூல் ஆனது.

கலகலப்பு - 2

காமெடி படமெடுப்பதற்குப் பேர்போன இயக்குநர் சுந்தர் சி. குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள கலகலப்பு - 2 படத்தில் சினிமாவில் வியாபார மதிப்பு அதிகம் இல்லாத ஜீவா, ஜெய், சிவா ஆகியோர்தான் ஹீரோக்கள்.

குஷ்பூ - சுந்தர்.சி கூட்டணியில் தயாரான படம் என்பதால் வியாபார முக்கியத்துவம் மிக்க படமாகஆனது. தியேட்டர்களில் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம், ஓப்பனிங் இல்லை. ஒரு காட்சிக்கு 100 டிக்கட் விற்பனையைக் கடப்பதற்கு முதல் நாள் சிரமப்பட்ட இப்படம் சனி, ஞாயிற்று கிழமைகளில் வசூல் அதிகரித்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 6 கோடி.

சொல்லிவிடவா

நடிகர் அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யாவைக் கதாநாயகியாக்கத் தயாரித்த படம் சொல்லிவிடவா. கதை திரைக்கதை வசனம் எழுதி அர்ஜுன் இயக்கியுள்ளார். பிரகாஷ் ராஜ், சுஹாசினி, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், கெளரவவேடத்தில் அர்ஜுன் என மக்கள் அறிந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படத்திற்கு ஓப்பனிங் இல்லை. முதல் நாள் பல ஊர்களில் பார்வையாளர்கள் வருகையின்மையால் காட்சிகள் ரத்தாகின. முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில்சொல்லிவிடவா மொத்த வசூல் சொல்லக்கூடிய கௌரவமான தொகை இல்லை.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon