மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தத்கல் முறைகேடு : 19 ஆப்ஸ்களுக்கு தடை!

தத்கல் முறைகேடு : 19 ஆப்ஸ்களுக்கு தடை!

தத்கல் முன்பதிவு முறைகேடு காரணமாக நாடுமுழுவதும் 19 ஆப்ஸ்களுக்கு இந்திய ரயில்வே துறை தடை விதித்துள்ளது.

ரயிலில் பயணம் செய்ய கடைசி நேர முன்பதிவுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘தத்கல்’ முன்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் ‘தத்கல்’ முன்பதிவுக்கென குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். பயணத்திற்கு முந்தைய நாளில் தத்கல் முன்பதிவு முறை மூலம் பயணிகள் ரயில் டிக்கெட்டைப் பெறலாம். இதனால் தத்கல் முறையில் டிக்கெட் வாங்கக் கடும் போட்டி நிலவும். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் தீர்ந்துவிடும். ஏஜெண்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தத்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறும் வகையில் ரயில்வே துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும், சில தனியார் நிறுவனங்கள் மென்பொருளில் மாற்றம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றன.

இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதால், myrailinfo.in, www.tatkalaap.com, www.tatkalsoftservice.com உள்ளிட்ட 19 இணையதளங்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே துறை தடை விதித்துள்ளது.

ஐஆர்சிடிசி அதிகாரிகள், “டெல்லி, மும்பை, நாக்பூர், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட இடங்களில் தட்கால் ரயில் டிக்கெட் முன்பதிவில் சில தனியார் இணையதளங்கள், ஆப் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன” எனத் தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி இணையதளத்தை முடக்கி, கம்ப்யூட்டர் மவுசில் மூலம் ஒரே ஒரு கிளிக் செய்து நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் புதிய மென்பொருளை வடிவமைத்த சிபிஐயின் ஊழல் தடுப்பு பிரிவின் மென்பொருள் பொறியாளர் அஜய் கார்க் (வயது 35) 2017, டிசம்பர் 26ஆம் தேதி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon