மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

லாவண்யாவை மிஞ்சும் ஷாலினி பாண்டே

லாவண்யாவை மிஞ்சும் ஷாலினி பாண்டே

‘லாவண்யா நடிச்சிருந்தாகூட இந்த அளவுக்கு நடிச்சிருப்பாங்களான்னு தெரியல’ என்று நடிகை ஷாலினி பாண்டே நடிப்பை புகழ்ந்திருக்கிறார் இயக்குநர் சந்திரமௌலி.

நாக சைதன்யா-தமன்னா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘100% லவ்’ திரைப்படம் தமிழில் ‘100% காதல்’ என்ற பெயரில் உருவாகிவருகிறது. தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சுகுமார் தமிழில் தயாரிக்கிறார். சந்திரமௌலி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அவரது ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் லாவண்யா திரிபாதி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஷாலினி பண்டே நடித்து வருகிறார்.

படம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு இயக்குநர் சந்திரமௌலி அளித்துள்ள பேட்டியில், “முதலில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிப்பதாக ஒப்பந்தம் போட்டோம். மொத்த படத்தையும் லண்டனில் ஷூட்டிங் செய்யத் திட்டமிட்டிருந்தோம். இந்தப் படத்துக்காக ஜிவி.பிரகாஷ் 2 மாதம் மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருந்தார். லண்டனுக்கு ஷூட்டிங் கிளம்பும் நேரத்தில் லாவண்யா திரிபாதி, ‘லண்டனுக்கு வர முடியாது. இங்கேயே வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டார்” என்றார்.

தொடர்ந்து, “ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த பிறகு ஹீரோயின் இப்படிச் சொன்னால் எப்படி இருக்கும். எங்களுக்குக் கடுமையான அதிர்ச்சி. அந்த டைம்ல ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதைப் பார்த்த என் நண்பர் ஒருவர், ஷாலினி பாண்டே பொருத்தமாக இருப்பார் என்று சொன்னார். ‘100% லவ்’ படத்தில் தமன்னா நடித்திருப்பார். பிரமாதமாக நடித்திருப்பார். ஆனால் ஷாலினி எப்படி நடிக்க போறாங்களோ என ரொம்ப யோசிச்சுப் பார்த்தோம். பின்னர் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஷாலினியை அழைத்தோம். நம்பவே முடியாத அளவுக்குப் பிரமாதமாக நடிச்சிக் கொடுத்தாங்க. லாவண்யா நடிச்சிருந்தாகூட இந்த அளவுக்கு நடிச்சிருப்பாங்களான்னு தெரியல” என்று கூறியுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon