மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ராணுவத்தைவிட வேகமானது ஆர்எஸ்எஸ்: மோகன் பகவத்!

ராணுவத்தைவிட வேகமானது ஆர்எஸ்எஸ்: மோகன் பகவத்!

ராணுவத்தைவிட அதிவிரைவாக போருக்கும் ஆயத்தமாகும் திறன் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் நேற்று பிப்ரவரி 11 நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத், “ஆர்எஸ்எஸ் ராணுவமோ அல்லது துணை ராணுவமோ அல்ல. ஆனால் ராணுவத்துக்கு நிகரான ஒழுக்க நெறிகள் பின்பற்றப்படும் ஒரு குடும்ப அமைப்பாகும். நாட்டுக்காக உயிர் துறக்க சங்க உறுப்பினர்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்றே நாட்களில் ராணுவ வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது. ராணுவம் 6 முதல் 7 மாத பயிற்சியில் செய்வதைச் சங்கம் மூன்றே நாட்களில் செய்துவிடும். அதுதான் எங்களின் திறமை. நாட்டுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அரசியல் சாசனம் அனுமதித்தால் நாங்கள் நிச்சயமாக இதைச் செய்து முடிப்போம்" என்று குறிப்பிட்டார்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon