மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

எனக்கு ஈகோ இல்லை: ஜீவா

எனக்கு ஈகோ இல்லை: ஜீவா

ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் படத்தில் நான் நடித்தாலும் எனக்கு யாரிடமும் ஈகோ கிடையாது என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஜீவா.

சுந்தர சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கலகலப்பு 2 படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்திருந்தார் ஜீவா. தற்போது கீ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் கொரில்லா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜுமுருகன் இயக்கத்தில் ஜிப்ஸி படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் sify இணையதளப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஹீரோ ரேசில் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அந்த ரேசில் நான் இல்லை. ரேசில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் கௌரவத்துக்காக பிரமாண்டமாகப் படம் எடுக்கிறேன் என்று கணக்கில்லாமல் செலவழித்துவிட்டு கடனாளியாக இருக்கிறார்கள். இன்றைக்கு இசையமைப்பாளர்களும் நடிக்க வந்துவிட்டார்கள். அதனால் அத்துறையில் அவர்களுக்குக் கவனம் சிதறிவிடுகிறது. நல்ல ஸ்கிரிப்ட் மிக முக்கியம் என்று கருதுகிறேன். அதற்கு எழுத்தாளர்கள் அதிகம் தேவை” என்று கூறியுள்ளார்.

“ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் படத்தில் நான் நடித்தாலும் எனக்கு யாரிடமும் ஈகோ கிடையாது. ஒருவரையொருவர் காலை வாரிவிட வேண்டும்; அந்த ஹீரோ படம் ஓடக் கூடாது என்ற எண்ணம் யாருக்கும் வரக் கூடாது. தற்போது யு சான்றிதழ் நோக்கி படங்களை எடுக்க வேண்டிய நிலை உள்ளதால் குடும்பப் பாங்கான கதைகளையே தேர்வு செய்ய வேண்டியுள்ளது. வெளிப்படையாக ஒரு கருத்தைச் சொல்ல முடியாத நிலை உள்ளது. நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon