மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கரடி தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!

கரடி தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதால், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சூசை என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவரை நேற்று (பிப்ரவரி 11) இரவு வெகு நேரமாகியும் காணாததால், உறவினர்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் தேடியுள்ளனர். அப்போது, ஆண்டிவீரன் பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள், கரடி தாக்கியதால்தான் சூசை உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர். பின்னர், சூசையின் உடலைப் பிரேத பரிசோதனைக்குக் காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.

சூசை இறந்ததைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் கரடி நடமாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் வனவிலங்குகள் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவருகின்றன. தங்களை அச்சுறுத்தும் வகையில் பயிர்களைச் சேதப்படுத்திவருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது வனவிலங்குகள் மனிதர்களையும் தாக்கிவருவதால், தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிப் பகுதியில் ஒரு காட்டு யானை தாக்கியதில் 3 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon