மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

போலி ஐ.டி.ரெய்டு: பின்னணியில் மாதவன்?

போலி ஐ.டி.ரெய்டு: பின்னணியில் மாதவன்?

வருமானவரித் துறை அதிகாரி என்று பொய் கூறி ஜெ.தீபா வீட்டில் ரெய்டு நடத்த முயன்ற நபர் நேற்று போலீசில் சரணடைந்தார். தீபாவின் கணவர் மாதவன் சொல்லியே வருமானவரித் துறை அதிகாரியாக நடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் இல்லம் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வருமானவரித் துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்த வீட்டைச் சோதனையிட வந்திருப்பதாகக் கூறினார். தகவல் அறிந்த செய்தியாளர்களும் போலீசாரும் அங்கு வந்ததால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்துத் தப்பியோடினார்.

தப்பிச் சென்ற நபரைப் பிடிக்க போலீசார் முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது தீபா வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் வேறு திசையில் வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று(பிப்ரவரி 11) இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் வருமானத் துறை அதிகாரி போல் நுழைந்த போலி நபர் சரணடைந்தார்.

போலீசாரின் விசாரணையில் அவர் பெயர் பிரபாகரன் என்பதும் விழுப்புரத்திலும் பாண்டிச்சேரியிலும் அவர் ஹோட்டல் நடத்திவருவதும் தெரியவந்தது.

மேலும், தனது கடைக்குத் தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக மாதவன் ஆசை காட்டியதாகத் தெரிவித்துள்ளார். மாதவன் தன்னை வருமான வரித் துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு தெரிவித்ததாகவும் பிரபாகரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “மாதவன் கூறியதால் நானும் அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர் கூறியபடியே நடந்துகொண்டேன். அந்த வீட்டில் சோதனைக்கான ஆவணத்தையும் மாதவனே வழங்கி, பின் தீபாவுக்கும் போன் செய்து வருமான வரித் துறை அதிகாரி போல் பேச ச்சொன்னார். நானும் பேசினேன். பின்னர் ஊடகங்கள், போலீசார் வந்ததும் அதிர்ச்சியடைந்தேன். என்னைத் தப்பித்துப்போகுமாறு மாதவன் கூறியதையடுத்து சுவர் ஏறிக் குதித்துத் தப்பித்துச் சென்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மாதவனிடம் ஊடகத்தினர் கேள்வியெழுப்பியபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon