மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஏற்றுமதி மேம்பாடு: உயரும் ஊக்கத்தொகை!

ஏற்றுமதி மேம்பாடு: உயரும் ஊக்கத்தொகை!

இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக வழங்கப்படும் ஊக்கத் தொகையானது ரூ.1.2 லட்சம் கோடியை எட்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு செய்தியாளர்களிடையேயான சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக உள்ளது. இந்நிதியாண்டுக்கான கடைசி இரண்டு மாதங்களிலும் ஏற்றுமதி ஏற்றத்தைச் சந்திக்கும். ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஊக்கத்தொகை வழங்கும் பல்வேறு திட்டங்கள் அதற்கு உதவிகரமாக இருக்கின்றன. அரசு வழங்கும் ஊக்கத் தொகையானது இந்த நிதியாண்டில் 1 லட்சம் கோடியைத் தாண்டி ரூ.1.2 லட்சம் கோடியை எட்டும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 15 சதவிகித வளர்ச்சியை அடையும் என்று கூறியிருந்தோம். ஏற்றுமதி அதிகரிப்பதற்கு ஊக்கத்தொகை வழங்கும் அரசின் திட்டங்கள் காரணமாக இருக்கின்றன. 2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலான ஏற்றுமதி மதிப்பு ரூ.76,980 கோடியாக இருந்ததாக அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் அந்நிய நாடுகளுடனான வர்த்தக மதிப்பு 1 லட்சம் கோடி டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பேசினார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon