மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்!

இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்!

திரிபுரா சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று (பிப்ரவரி 12) வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இதில், இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுமென்றும், அம்மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்கார் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. வரும் பிப்ரவரி 18ஆம் தேதியன்று அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 51 தொகுதிகளிலும் திரிபுரா மக்கள் முன்னேற்ற முன்னணி 9 இடங்களிலும் களமிறங்கியுள்ளன.

சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவரும் மாணிக் சர்காரின் சாதனையை முறியடிக்கும் விதத்தில் செயல்பட்டுவருகிறது பாஜக கூட்டணி. கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் இங்கு நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். அம்மாநிலத்திலுள்ள பழங்குடி மக்களைக் குறிவைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது பாஜக.

நேற்று, திரிபுரா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. திரிபுராவில் உணவுப் பதப்படுத்துதல் நிலையம், தகவல் தொழில்நுட்ப மையம், ஜவுளி மற்றும் மூங்கில் துறைகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்குப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படுமென்றும், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கல்லூரி அமைக்கப்படுமென்றும், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்படுமென்றும் பாஜக அறிவித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தின் கல்வித் தரம் உயர்த்தப்படுமென்றும், இங்கு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனைகள் நிறுவப்படுமென்றும் தெரிவித்தார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி. “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், திரிபுராவில் பாஜக விரிவடைந்துவருகிறது. நாடு முன்னேற வேண்டுமென்று விரும்புகிறார் பிரதமர் மோடி. அதற்காகத்தான், திரிபுராவில் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளது பாஜக. கிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்துச் சந்திப்பு இடமாக, திரிபுரா மாநிலம் மாற்றப்படும். வங்கதேசத்திற்கு அருகில் இம்மாநிலம் இருப்பதே இதற்குக் காரணம்” என்று கூறினார் அருண் ஜேட்லி.

பொதுவாக இலவசங்களுக்கு எதிராக முழக்கமிட்டுவரும் பாஜக, திரிபுராவில் இளைஞர்களைக் குறிவைத்து இலவச ஸ்மார்ட் போன் வழங்குவதாக அறிவித்திருப்பது, சமூக வலைதளங்களில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon