மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ராணுவ முகாம் மீது தொடர் தாக்குதல் முயற்சி!

ராணுவ முகாம் மீது தொடர் தாக்குதல் முயற்சி!

ஜம்மு காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சிஆர்பிஎஃப் முகாம் மீது தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் இன்று முயற்சி செய்துள்ளனர். சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் நடைபெற்ற தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 10) அதிகாலை புகுந்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவக் குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதால், சஞ்சுவான் பகுதியில் கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதையும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளுடன், சனிக்கிழமை காலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாய்-சேய் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து, முகாமில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்த வீரர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்தினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் ராணுவ முகாமில் தடயங்களைச் சேகரித்தனர். சஞ்சுவான் பகுதியில் நேற்று (பிப்ரவரி 11) இரவுக்குப் பின் அங்கு துப்பாக்கிச் சண்டை எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் வந்த ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என மத்திய உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல்

சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, சிஆர்பிஎஃப் முகாம் மீது தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் இன்று முயற்சி செய்துள்ளனர். சிஆர்பிஎஃப் முகாம் நோக்கி இரண்டு தீவீரவாதிகள் ஏ.கே.47 ரகத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்ததாகவும், இதைக் கண்ட காவலாளிகள் அவர்களைத் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால், தீவிரவாதிகள் அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சிஆர்பிஎஃப் முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon