மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

பத்மாவதி: பகடையாட்டம் ஆடிய திருச்சி ஸ்டார் தியேட்டர்!

பத்மாவதி: பகடையாட்டம் ஆடிய திருச்சி ஸ்டார் தியேட்டர்!

இந்த வருடம் வெளியான இந்தியப் படங்களில் சர்வதேச சினிமா பார்வையாளர்களின் கவனத்திற்குள்ளாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த முதல் படம் பத்மாவதி.

பத்மாவதி ரீலீஸ் ஆவதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொண்ட அவமானம், எதிர்ப்புகள், சட்டப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.பத்மாவதி படத்தைத் தமிழகம் முழுவதும் சத்யம் சினிமாஸ் வெளியிட்டது.

திருச்சியில் ஸ்டார் தியேட்டரில் பத்மாவதி திரையிடப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்தப் படத்திற்கு விளம்பரம் இல்லை. ஆனால் தமிழ்ப் படங்களை காட்டிலும் அதிகமான டிக்கட்டுகள் விற்பனையாகி தொடக்கக் காட்சிமுதல் கல்லா கட்டியது பத்மாவதி.

எம்.ஜி., (மினிமம் கியாரண்டி) அல்லது அட்வான்ஸ் என்று தியேட்டர்காரர்களிடம் வாங்காமல் திரையிடப்பட்ட பத்மாவதி பட வசூலில் திருச்சி ஸ்டார் தியேட்டர் உரிமையாளர்கள் தனியாக கல்லா கட்டிய கொடுமை தமிழ் சினிமாவில் தனி ரகம்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கட் விற்பனை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வசூலான தொகையில் தமிழக அரசு ஆணைப்படி 8% கேளிக்கை வரி கழிக்காமல் 15% சதவீதம் பிடித்தம் செய்திருக்கிறது. அது மட்டுமின்றி 3D கண்ணாடி30 ரூபாய் அதற்கு GST 2 ரூபாய் என வசூல் செய்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பத்மாவதி படத்திற்கு 3D வசதி உள்ள தியேட்டர்களில் கண்ணாடிக்கான வாடகைக் கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டு காட்சி முடிந்ததும் கண்ணாடி திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

திருச்சி ஸ்டார் தியேட்டரில் இதே நடைமுறைதான் என்றாலும் அடித்த வரை லாபம் என மோடியின் GST பார்முலாவை கண்ணாடிக்கும் தியேட்டர் நிர்வாகம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

“கவுண்டரில் விற்க்கப்படும் டிக்கட் கட்டணத்திற்கு 18% சதவீத GST + 15 % கேளிக்கை வரி = 33% சதவீதம் கூடுதல் வசூல் செய்யும் தியேட்டர் நிர்வாக நடவடிக்கை அராஜகமானது என்றாலும் பத்மாவதி படம் பார்ப்பதற்காகப்பொறுத்துக்கொண்டோம். எங்களிடம் வசூலித்த தொகைக்கான வரி அரசுக்குச் செலுத்தப்பட்டதா என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூவம் உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்” என்கிறார் திருச்சி ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த அரங்கநாதன்.

- இராமானுஜம்

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon