மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஜெ.படத் திறப்பு: கட்சியை மீறி ஆதரித்த விஜயதரணி

ஜெ.படத் திறப்பு: கட்சியை மீறி ஆதரித்த விஜயதரணி

ஜெயலலிதாவின் படத் திறப்புக்கு ஆதரவளித்த காங்கிரஸ் சட்டமன்றக் கொறடா விஜயதரணி, சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைச் சட்டப்பேரவையில் சந்தித்துப் பேசினார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை எப்படி சட்டமன்றத்துக்குள் திறக்கலாம் என்று கேள்வியும் எழுப்பினர். ஆனால் காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்றக் கொறடா விஜயதரணி மட்டும் படத் திறப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி இன்று (பிப்ரவரி 12) சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் படத்திறப்பு நிகழ்வில் பங்கெடுக்க மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அறிவிப்பு வெளியிட்டதால், படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொள்ளாத விஜயதரணி, நிகழ்வு முடிந்த பிறகு சபாநாயகர் தனபாலை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் முதல்வரையும் சந்தித்துப் பேசினார்.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, "எங்கள் கட்சியின் நிலைப்பாடு காரணமாக நான் படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண் தலைவரின் படத்தைச் சட்டமன்றத்தில் திறந்துவைத்ததை நல்ல நிகழ்வாக நான் பார்க்கிறேன். தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட பெண்கள் நலனுக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா" என்று பாராட்டும் கூறினார்.

"இன்றைக்கும் அரசியலுக்குப் பெண்கள் போராடித்தான் வரவேண்டும் என்ற நிலையில், பல முறை முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய படத்தைச் சட்டமன்றத்தில் திறந்துவைத்ததை பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன். இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக என்னைக் கவர்ந்த தலைவர் ஜெயலலிதா. இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை" என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரஸின் நிலைப்பாட்டின்படி படத்திறப்பு நிகழ்வில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஜெயலலிதா குறித்து விஜயதரணி கூறியது அவரது சொந்தக் கருத்து. அவர் படத்திறப்பில் கலந்துகொள்ளாததால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால் அவருடைய கருத்துக்கள் குறித்து ஆராயப்பட்டு தலைமையிடம் கொண்டு செல்லப்படும்" என்று கூறியுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon