மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தாஜ்மஹாலில் டிரோன்களுக்குத் தடை!

தாஜ்மஹாலில் டிரோன்களுக்குத் தடை!

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் டிரோன்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி தாஜ்மஹாலைச் சுற்றி டிரோன்களைப் பறக்கவிடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைக் கண்டு ரசிக்க உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று தாஜ்மஹாலைப் பார்வையிட ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது அங்கு பறந்துகொண்டிருந்த டிரோனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தற்போது தாஜ்மஹாலைச் சுற்றி டிரோன்களைப் பறக்கவிடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ரா போலீஸ் சூப்பிரண்ட் கன்வர் அனுபம்சிங் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "தடையை மீறி தாஜ்மஹாலைச் சுற்றியோ அல்லது உள்ளேயோ டிரோன்களைப் பறக்கவிட்டால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 287 (அத்துமீறி செயல்படுதல்), 336 (உயிருக்குப் பாதுகாப்பின்மையை உருவாக்குதல்), 337, 338 (பிறருக்குக் காயம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும் அவர்களுக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இது குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பிரச்சாரம் செய்யப்படும். மேலும் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

2017ஆம் ஆண்டு மட்டும் தாஜ்மஹாலைச் சுற்றி 20 டிரோன்கள் பறந்தது கண்டறியப்பட்டது. தற்போது இந்தத் தடையினால் தாஜ்மஹாலைச் சுற்றி டிரோன்களைப் பறக்கவிடுவோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon