மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கன்யதீன் நடத்திய அம்மா!

கன்யதீன் நடத்திய அம்மா!

இந்தியாவில் நடக்கும் பொதுவான ஒரு திருமணமாகத்தான் தெரிகிறது. ஆனால், புகைப்படத்தை உற்று நோக்கினால்தான், மணமகள் தன் தாயின் மடியில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாகத் திருமணத்தில் தந்தை தன் மகளை மடியில் உட்காரவைத்து மாப்பிள்ளைக்குத் தாரைவார்த்துக் கொடுப்பது வழக்கம். ஆனால், சந்தியாவின் வாழ்க்கையில் ராஜி சர்மாதான் அவருக்கு அம்மாவும் அப்பாவும். அதனால் திருமணத்தில் அவரே தனது மகளைத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்.

“சந்தியா இந்து பிராமண முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என விரும்பினார். அதனால் என் மகளின் திருமணத்தில் அப்பா என்ற ஸ்தானத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பினேன். ஆனால், என் குடும்பம் இந்த முடிவை ஆதரிக்குமா என்று எனக்குத் தெரியாது. மேலும், இதை ஏற்றுக்கொள்கிற வகையில் ஒரு பூசாரி கிடைப்பாரா என்றும் எனக்குத் தெரியவில்லை.

இந்த முடிவு குறித்து என் குடும்பத்தாரிடம் தெரிவித்தபோது, திறந்த மனதுடன் அதை ஏற்றுக்கொண்டனர். சந்தியாவின் வாழ்க்கையில் தாயாகவும் தந்தையாகவும் இருந்த உனக்கு கன்யதீனை (திருமணம்) நடத்தும் தகுதி இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களின் யோசனைக்கேற்றவாறு ராகவன் என்ற பூசாரி அழைத்துவரப்பட்டு, நான் என் மகளை மாப்பிள்ளையின் கையில் கொடுத்தேன்” எனப் பெருமிதத்துடன் கூறினார் ராஜி சர்மா.

திருமணத்துக்கு வந்த அனைவருமே இதுபோன்ற திருமணத்தை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டார்கள். அனைவருக்குமே இது ஒரு புது அனுபவமாக இருந்தது. ராஜி சர்மாவுக்கும் பல பாராட்டுகள்.

ராஜி சர்மாவின் வாழ்க்கைப் பயணம் எளிதல்ல. சென்னையில் குடியேறிய ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். திருமணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குடியேறினர். பதினேழு ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார். இரண்டு குழந்தைகள் ஆன பிறகு, அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது. வாழ்க்கை முழுவதும் தனி மனுஷியாக இருந்து தங்கள் பிள்ளைகளை வளர்த்துள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon