மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

நாராயணசாமி அல்வா கடை: பாஜக போராட்டம்!

நாராயணசாமி அல்வா கடை: பாஜக போராட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (பிப்ரவரி 12) அல்வா விற்பனை செய்யும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் புதுச்சேரி பாஜகவினர்.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் அவதிப்படுவதாகக் குற்றம்சாட்டின எதிர்க்கட்சிகள். இதற்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, அரசுப் பணி மட்டுமே வேலைவாய்ப்பு கிடையாது என்றும், பக்கோடா விற்றால்கூட தினமும் 600 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றும் கூறினார். இதனை எதிர்த்து, கடந்த வாரம் புதுச்சேரியில் பக்கோடா விற்கும் போராட்டத்தில் கலந்துகொண்டார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி.

இதனையடுத்து, தமிழகத்திலும் சில இடங்களில் பக்கோடா விற்கும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுத்தனர். நாராயணசாமியின் போராட்டத்திற்குத் தமிழக, புதுச்சேரி பாஜகவினர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று நாராயணசாமிக்கு எதிராக அல்வா விற்பனை செய்யும் போராட்டத்தில் குதித்தனர் புதுச்சேரி பாஜகவினர்.

நாராயணசாமி அல்வா கடை என்ற பெயரில், புதுச்சேரி நேரு சாலையில் அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. ”பக்கோடா விற்கும் போராட்டத்தில் இறங்கி, மாநிலத்திலுள்ள பிரச்சினைகளின் மீதான மக்களின் கவனத்தை அவர் திசைதிருப்புகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் இந்நாள் வரை, புதுச்சேரியில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வா கொடுத்துவருகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளது பாஜக.

பிரதமர் மோடியைக் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி என்று பாஜக கூறிவந்த நிலையில், தற்போது இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon