மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

நகர்ப்புற வாழ்வைப் பிரதிபலிக்கும் நவீன நாடகம்!

நகர்ப்புற வாழ்வைப் பிரதிபலிக்கும் நவீன நாடகம்!

பெங்களூருவைச் சேர்ந்த டேட்டோ நாடகக் குழுவினர் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் ஹைதராபாத்தில் வெவ்வேறு இடங்களில் இரு நவீன நாடகங்களை அரங்கேற்றினர்.

ஹைதராபாத் கலை மற்றும் கலாச்சார மையத்தில் உள்ள பீனிக்ஸ் அரங்கம், லமாகான், அப்பல்லோ பவுண்டேஷன் ஆகிய மூன்று இடங்களில் ஒவ்வொரு நாளும் 7.30 மணிக்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

நாடகக் குழுவின் உறுப்பினரான பியூஷ் அகர்வால் டெக்கான் கிரானிக்கிளுக்கு அளித்த பேட்டியில், “கற்பனையாக எழுதப்பட்ட நகர்ப்புறத்தைச் சார்ந்த ஆறு நாட்டார் கதைகளை உள்ளடக்கி ரிமெம்பெர் ரிமெம்பெர் (Remember Remember) என்ற நாடகத்தை உருவாக்கியுள்ளோம். கிராமங்களைச் சார்ந்த நாட்டார் கதைகளை நிறைய வாசித்திருப்போம். நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கதைகளை உருவாக்க எண்ணினோம். இரண்டு பக்கங்களையும் கவனமாக இணைத்துள்ளோம். ஹைதராபாத் நகரத்துக்குப் பொருத்தமானதாக அது அமைந்தது” என கூறியுள்ளார்.

மற்றொரு நாடகமான ஏ ஃபன்னி திங் கால்டு லைஃப் (A Funny Thing Called Life ) அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகப் பிரதிபலிக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது.

பியூஷ், பிரசாந்த் நாயர், படாரிவிஷால் கின்ஹல், விக்ரம் ஸ்ரீதர் ஆகியோர் சேர்ந்து டேட்டோ நாடகக் குழுவைத் தொடங்கியுள்ளனர். “ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறையின்போது நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அப்போது அனைவரும் சேர்ந்து ஒரு நாடகத்தையேனும் சேர்ந்து அரங்கேற்றவேண்டும் என நினைத்தோம். 9 வருடங்களுக்கும் மேலாக எங்கள் பயணம் தொடர்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் எங்கள் நாடகங்களை அரங்கேற்றியுள்ளோம். வெவ்வேறு பணிகளில் இருக்கும் நாங்கள் நாடக உருவாக்கத்தின்போது இணைந்து செயல்படுவோம்” என்று பியூஷ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon