மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சமன் செய்த மூன்றாவது முயற்சி!

சமன் செய்த மூன்றாவது முயற்சி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி போராடி சமன் செய்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) எனப்படும் கால்பந்து தொடர் மிக சுவாரஸ்யமாக நடைபெற்றுவருகிறது. அதில் நேற்று (பிப்ரவரி 11) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் புனே சிட்டி, மும்பை சிட்டி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த சீசனில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிவரும் புனே அணி இந்தப் போட்டியிலும் மும்பை அணியை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வீழ்த்தியது. போடியின் 18ஆவது நிமிடத்தில் மும்பை அணி வீரர் வீரர் ராஜு ஓன் கோல் அடித்து புனே அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். அதன் பின்னர் 83ஆவது நிமிடத்தில் மார்செலோ இரண்டாவது கோல் அடித்து 2-0 என புனே அணியை வெற்றி பெற வைத்தார்.

தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த சென்னை அணி சமீபத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இதனால் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாதியின் 59ஆவது நிமிடத்தில் டெல்லி அணி வீரர் களு உசே பெனால்டி வாய்ப்பினை கோலாக மாற்றினார். எனவே 1-0 என டெல்லி அணி முன்னிலை பெற்றது. எனவே சென்னை அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கினர். சென்னை வீரர் மில்சன் ஆல்வஸ் இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் இரண்டும் கோல் ஆகாமல் தவறின. இருப்பினும் ஹெட்டிங் முறையில் மில்சன் ஒரு கோல் அடித்து போட்டியை 1-1 எனச் சமன் செய்தார்.

சென்னை அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon