மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தொடரும் பணம் எண்ணும் பணி!

தொடரும் பணம் எண்ணும் பணி!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஐ நிறுவனம் இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் கேட்ட கேள்விகளுக்கு, "சமரசமில்லாமல் மிகவும் துல்லியமாகவும், உண்மைத்தன்மையுடனும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தவுடன் அதுகுறித்த முழுத் தகவல்கள் வெளியிடப்படும். 2017ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் திரும்பப் பெறப்பட்ட மொத்த ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ.15.28 லட்சம் கோடியாகும். மிகவும் வேகமாக எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூபாய் நோட்டுக்களை எண்ண 59 அதிநவீன நாணய சரிபார்ப்பு மற்றும் செயலாக்க (சி.வி.பி.எஸ்.) இயந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய வணிக வங்கிகளில் ஏற்கனவே 8 சி.வி.பி.எஸ். இயந்திரங்கள் உள்ளன. 7 சி.வி.பி.எஸ். இயந்திரங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாதவையாக அறிவித்தது. அப்போது புழக்கத்தில் 1,716.5 கோடி 500 ரூபாய் தாள்கள் மற்றும் 685.8 கோடி 1000 ரூபாய் தாள்கள் என ரூ.15.44 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் புழக்கத்தில் இருந்தது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட மொத்த ரூபாய் தாள்களில் 99 சதவிகிதம் (ரூ.15.28 லட்சம் கோடி) வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon