மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

பட்ஜெட்: தத்தளிக்கும் தமிழ்நாடு!

பட்ஜெட்: தத்தளிக்கும் தமிழ்நாடு!

ஆரா

மத்திய பட்ஜெட் தாக்கலாகிவிட்டது. அடுத்து தமிழர்களின் தலையில் இறங்கப்போவது தமிழ்நாடு அரசின் மாநில பட்ஜெட். கடந்த சில வாரங்களாகவே கோட்டையிலுள்ள முக்கிய அதிகாரிகளின் பேச்சு பட்ஜெட்தான். அதுவும் நிதித் துறையில் இருக்கும் அதிகாரிகளின் தலைபோகும் பிரச்னையே பட்ஜெட் பற்றிதான்.

ஏனெனில், சூட்கேஸைத் தூக்கி வந்து பட்ஜெட்டை வாசிப்பது நிதியமைச்சராக இருந்தாலும், ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு ரூபாய் ஒதுக்கீடு, செலவு என்ன, புதிய திட்டங்கள் என்ன என்பதை எல்லாம் முதல்வர், நிதியமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க இறுதி வரைவு செய்வது நிதித் துறை அதிகாரிகள்தான்.

எடப்பாடி பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட் கடந்த வருடம் மார்ச் 16ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமாரால் சமர்ப்பிக்கப்பட்டது. ஆட்சி பிழைத்ததே பிப்ரவரி 18 என்பதால் ஒரு மாதம் ஆகிவிட்டது பட்ஜெட் தாக்கல் செய்ய. இந்த வருடம் இதோ பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கலாகும் என்று தெரிகிறது.

எப்படி இருக்கப் போகிறது இந்த வருட பட்ஜெட் என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தால் அதிர்ச்சித் தகவல்கள்தான் கிடைக்கின்றன.

எகிறும் கடன்!

கடந்த வருடம் மார்ச் 16ஆம் தேதி நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது, பல்வேறு புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் செலவு ரூ.1,75,293 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2016-17இல் நிதி பற்றாக்குறை ரூ.40,534 கோடியாக முதலில் கணக்கிடப்பட்டு பிறகு அந்தக் கணிப்பு ரூ.61,341 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிதி நிர்வாக பொறுப்புடமைச் சட்டத்தில் குறிப்பிட்ட வரையறையைவிட இது அதிகம் என்றாலும் வரும் நிதியாண்டில் இது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்ற ஜெயக்குமார் மிக முக்கியமாக, ‘2018 மார்ச் மாத இறுதியில் மாநிலத்தின் நிகர கடன் ரூ.3,14,366 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, சென்ற வருடமே இந்த வருடத்தின் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கணக்கிட்டனர். ஆனால் இப்போது தமிழ்நாட்டின் கடன் தொகை வட்டித் தொகை எல்லாம் ரூ.3.14 லட்சம் கோடியை எல்லாம் கடந்து நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக போய்விட்டது. கடந்த ஆறு மாத காலமாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுவிட்டதால் தமிழகத்துக்கு வர வேண்டிய வரி வருவாயில் மிகப் பெரிய வெட்டு விழுந்திருக்கிறது. வரி வருவாயில் ஏற்பட்ட வெட்டைச் சமாளிக்க நம்மிடம் தொழில் வளர்ச்சியும் இல்லை. கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் தொழிற்சாலைகள் எதுவும் புதிதாக அமைக்கப்படவில்லை.

அத்தியாவசியத்துக்கே நிதி இல்லை!

இதனால் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் பாதாளத்துக்குப் போய்விட்டது. பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை விட முதல்வர்தான் அதிகாரிகளுடன் அதிகமாக ஆலோசித்திருக்கிறார். நிதித்துறை செயலாளர்களில் வருவாய்க்கான செயலாளர் சண்முகம், செலவினத்துக்கான செயலாளர் சித்திக் ஆகிய இரு அதிகாரிகள் மற்றும் பல மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது சில கவர்ச்சித் திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் கேட்க... ‘அத்தியாவசியத் தேவைகளுக்கே நிதி இல்லை. இதில் எந்த சிறப்புத் திட்டமும் அறிவிப்பதற்கு நிதி சுத்தமாக இல்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஸ்கூட்டி மானியம் என்று விரயங்கள் அதிகமாகிவிட்டன’ என்று புள்ளிவிவரங்களோடு முதல்வரிடம் விளக்கியிருக்கிறார்களாம் அதிகாரிகள்.

ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற வங்கிகளில் கடன் வாங்கலாம் என்றும் தமிழக அரசுத் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டதாகவும் ஆனால், அதற்கும் சரியான பலன் இல்லை என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகிறார்கள். அதனால் இந்த வருட பட்ஜெட் பற்றிய ஆலோசனைகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்டாலினை எச்சரித்த அதிகாரிகள்!

கோட்டையில் இருக்கும் அதிகாரிகளில் பலர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் ஸ்டாலினிடம் பேசும்போது, ‘தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது. தகுதிநீக்க வழக்கு, தினகரன் பிரச்னை எல்லாம் சரியாகிவிட்டால்கூட இன்னும் ஆறு மாதத்துக்கு மேல் தமிழக நிதி நிலைமை தாங்காது. எனவே, அடுத்து தேர்தல் வந்தால்கூட கவர்ச்சி வாக்குறுதிகள் எதையும் மக்களுக்கு வழங்காதீர்கள். அப்படிக் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் தலைகீழாய் நின்றால்கூட உங்களால் நிறைவேற்ற முடியாது’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.

2018 பட்ஜெட் தயாரிப்பதற்காக கோட்டை தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த நிலைமைக்கு மத்திய அரசும் ஒரு காரணம் என்பதை இனியாவது மாநில அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமா என்பதுதான் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon