மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஜெயலலிதா படம்: நாடாளுமன்றத்திலும் திறக்கலாம்!

ஜெயலலிதா படம்: நாடாளுமன்றத்திலும் திறக்கலாம்!

‘முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் படத்தைச் சட்டப்பேரவையில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்திலும் திறக்கலாம்’ என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி தமிழகச் சட்டபேரவை மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இன்று (பிப்ரவரி12) திறக்கப்படும் என்று சட்டப்பேரவை செயலர் பூபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தைத் தமிழகச் சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஜெயலலிதாவின் படம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பாக, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேரவை செயலரிடம் நேற்று மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று (பிப்ரவரி 11) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “உலகத்தில் உள்ள பத்துக் கோடி தமிழர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே தலைவர் அம்மா மட்டுமே. அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி என இம்மூன்று வளர்ச்சிகளையும் சாதித்தவர். முதலமைச்சராக இருந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வரலாற்றில், வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்று மக்களின் மனதில் நிற்பவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆவார். அவருடைய படத்தைச் சட்டமன்றத்தில் திறந்து வைப்பது குறித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எதிர்க்கட்சியினர் பழைய விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு படம் திறக்கக்கூடாது என்கிறார்கள். இது மாபெரும் துரோகம்” என்று கூறினார்.

மேலும், “சமூக நீதி காவலர் அம்மா அவர்களின் திருவுருவப் படத்தைச் சட்டசபையில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்திலும் வைப்பதற்கு அனைத்து தகுதியும் உள்ளது” என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில், “காவிரி நதிநீர் பிரச்னையைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். தினகரன் அரசியலில் அரைவேக்காடு என்றுதான் சொல்ல வேண்டும். காவிரி வழக்கில் இரண்டு இடைக்கால மனு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாங்கள் மனுத் தாக்கல் செய்ததையே தெரியாமல் ‘ஏன் அரசு மனுத் தாக்கல் செய்யக் கூடாது’ என்று தினகரன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மனு போட்டதே தெரியாமல் நடிக்கிறாரா இல்லை, அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுகிறாரா என்பது அவருக்கே தெரியும்” என்று கடுமையாக தினகரனை விமர்சனம் செய்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon