மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: திருவனந்தபுரமும் தமிழ்ப் படைப்பாளிகளும்!

சிறப்புக் கட்டுரை: திருவனந்தபுரமும் தமிழ்ப் படைப்பாளிகளும்!

வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

திருவனந்தபுர நகரம் உத்தமர் காந்தியால் இந்தியாவின் பசுமை நகரம் என அழைக்கப் பெற்றது. பரபரப்பில்லாத அமைதியான நகரம்.

தமிழ்ச் சொற்களான, திரு - அனந்த - புரம் ஆகிய பதங்களின் கூட்டே திருவனந்தபுரம் ஆகும். அனந்தன் என்ற பாம்பின் மீதே திருமால் (அரங்கநாதர்) சயனித்திருப்பார். கி.பி.1745 முதல் 1949 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது.

வரலாற்றுப் பின்னணி

ஸ்ரீ சித்திரைத் திருநாள் பால ராமவர்மா திருவிதாங்கூரின் கடைசி மன்னர். பின்னாள்களில் திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்துக்கு ‘ராஜப்பிரமுக்’ [ஆளுநர்] ஆகவும் பதவி வகித்தார். அவருக்கு திவானாக சென்னை சர். சி.பி.ராமசாமி அய்யர் இருந்தார். அவரது காலத்தில் கல்வி, சுகாதாரம், மக்கள் வசதியில் திருவிதாங்கூர் மற்ற சமஸ்தானங்களைக் காட்டிலும் மிகவும் முன்னணியில் இருந்தது.

திருவனந்தபுரத்தில் 1940லேயே தெருக் குடிநீர்க் குழாய்கள், மின்சார வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. காலையில் ‘குளித்து, குறியிட்டு’ பெண் குழந்தைகள் வரிசையாகப் பள்ளிக்குச் செல்லும் காட்சி மனதை வருடும் என்று பண்டித நேரு கூறியுள்ளார். கேரளாவில் இன்றிருக்கும் படிப்பறிவுக்கு அந்தக் காலத்திலேயே அடிக்கல் நாட்டிவிட்டார்கள். மார்த்தாண்ட வர்மா காலத்திலிருந்து, வஞ்சிநாடு பத்மநாபனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அரசர்கள் ‘பத்மநாப தாசன்’ என்று கடவுள் பெயரிலேயே ஆட்சி நடத்தினர். இந்தக் காலகட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தமிழகத்தில் இருந்து தமிழறிஞர்களையும், இசை மேதைகளையும் அழைத்து திருவிதாங்கூர் மன்னர் ஆதரித்ததுண்டு.

சி.பி. இராமசாமி அய்யர் காலத்தில்தான், நெல்லை மாவட்ட ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைத் திருவனந்தபுரத்துக்கு அழைத்து, சுவாதி திருநாள் மியூசிக் அகாடமி (இசைக் கல்லூரி) தொடங்கப்பட்டது. முத்தையா பாகவதருக்கு அடுத்து செம்மங்குடி சீனிவாசய்யர் அதன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் திருவனந்தபுரம் செல்லும் பாதை பயணத்துக்குத் தகுந்தவாறு இல்லையென்று சொன்னவுடன் திருவிதாங்கூர் அரசரும், சி.பி.ஆரும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை இந்தியாவிலேயே முதன்முறையாக சிமெண்ட் சாலையை அமைத்தது வரலாற்றுச் செய்தியாகும். இப்படியெல்லாம் திருவிதாங்கூர் சமஸ்தானம், தமிழையும் தமிழர்களையும் ஆதரித்ததுண்டு. அதேபோல முல்லைப் பெரியாறு போன்ற நீர்நிலைப் பிரச்னையிலும் தமிழகத்துக்கு ஆதரவாக இருந்தன. இன்றைக்கு நிலைமைகள் வேறு மாதிரி ஆகிவிட்டன. இன்றைக்கும் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் நாகர்கோவிலில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு பங்கேற்பதுண்டு.

1949க்குப் பிறகு இது திரு-கொச்சியின் தலைநகராக இருந்தது. நவம்பர் 1, 1956இல் கேரள மாநிலம் உருவானபோது அதன் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது.

இங்கு மலையாளமும் தமிழர்களும் சகோதரர்களாகவும், உறவுகளாகவும் வாழ்ந்ததுண்டு. இன்றும் அந்தக் கலாசாரம் தொடர்கிறது.

திருவனந்தபுரம் வளர்த்த தமிழ்

தமிழ் மொழி வளர்ச்சிக்குத் திருவனந்தபுரம் மண்ணும் அங்குள்ள பல்கலைக்கழகமும் திராவிட மொழிகளின் கேந்திரமும் தன் பணிகளைச் செய்கின்றன. ஷேக்ஸ்பியரைப் பின்பற்றி மனோன்மணியம் என்ற அற்புதமான நாடக நூல் எழுத இந்த மண் இடம் கொடுத்தது. இந்த மண்ணில் தமிழ்கூறு நல்லுலகம் போற்றும் பல ஆளுமைகள் வாழ்ந்து கடமைகளை ஆற்றினர், ஆற்றிவருகின்றனர். அற்புதமான படைப்புகளை வழங்கிய அந்தப் பிதாமகர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையிலுள்ளோம்.

திருவனந்தபுரத்தில் ஒரு காலத்தில் மகாராஜா கல்லூரியாக இருந்த திருவனந்தபுரப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ்த் துறை 135 ஆண்டுகள் கல்விச் சேவையைச் செய்துள்ளது. அங்குதான் ஆலப்புழை பெ.சுந்தரம்பிள்ளை தத்துவத் துறைப் பேராசிரியராக இருந்தார். ‘மனோன்மணியம்’ நாடக நூலை எழுதினார்.

வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ண பிள்ளை அப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார். அவர்தான் ‘இரட்சணிய யாத்ரிகம்’ எழுதினார்.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அங்கு பணியாற்றியவர். Dravidian Insititute of Tamil Studiesஇன் இயக்குநராக இருந்த பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியன் திருவனந்தபுரத்தில்தான் பணியாற்றினார். தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் இவற்றை மலையாளத்துக்குக் கொண்டு சென்ற பேராசிரியர் மா. இளையபெருமாள் கேரளப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்.

புத்தம் வீடு, அனாதை, டாக்டர் செல்லப்பா, மானீ முதலான அரிய நாவல்கள் எழுதிய ஆங்கிலப் பேராசிரியை ஹெப்சிபா ஜேசுதாசன், திருவனந்தபுரத்தில் பெண்கள் கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன், கேரளப் பல்கலைக்கழகத்தில் நவீனத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தவர். கிறிஸ்துவானாலும், கம்பரானாலும் சிறப்பாகக் கருத்துகளை வெளிப்படுத்துபவர். கவிஞர் ராஜமார்த்தாண்டன், திறனாய்வாளர் வேதசகாயகுமார், நாட்டுப்புறவியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் ஆகியோர் அவரது மாணாக்கர்கள்.

ஆண்டி ஐயர் என்றொருவர். நாகர்கோவில் வடிவீசுவரத்தில் பிறந்து திருவனந்தபுரத்தில் வாழ்ந்தார். அந்தக் காலத்தில் தீவிர நாடக இயக்கத்தை நடத்தியவர். வெங்கட் சாமிநாதன் நடத்திய ‘யாத்ரா’ இதழ், ஆண்டி அய்யருக்கு என்று சிறப்பிதழ் கொணர்ந்தது. நாடகக் கலைச் சொற்கள் அகராதி ஒன்றையும் தொகுத்தார். தமிழக அரசின் அச்சுக்குக் கொடுத்தும் புத்தகமாக வரவில்லை.

கர்னாடக இசைத் துறையில், வலிய மேலெழுத்துகள் வம்சத்தைச் சார்ந்த லட்சுமணன் பிள்ளையை இன்று யாரும் அதிகமாக அறிந்தவர்கள் இல்லை. சுவாதி திருநாள் இசைக் கல்லூரி முதல்வராக செம்மங்குடி சீனிவாச அய்யர் இருந்தார். ஆனால், ஓமனக்குட்டி அம்மையை நாம் நினைவுகூர வேண்டும். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பாடகியான பாறசாலை பொன்னம்மாளை இசையில் பாராட்டக்கூடிய ஆளுமையாகும். மோகன்லால் நடித்த புகழ்பெற்ற திரைப்படம் His Highness Abdulla, சுவாதி திருநாள் போன்ற படங்களில் பாடியவர் நெய்யாற்றின்கரை வாசுதேவன்.

மார் இவானியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குடந்தை துரைசாமி என்ற நகுலன். திருவனந்தபுரத்துக்காரர். குளத்து ஐயர் எனும் பெயருடைய காசியபன் (காஸ்யபன் என்ற படைப்பாளி வேறு) எழுதிய ‘அசடு’, ‘முகம்மது கதைகள்’, ‘கிரகங்கள்’ ஆகிய படைப்புகள் அனைவராலும் கொண்டாடப்பட்டன.

தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள் எனும் பல படைப்புகளை வழங்கிய நீல.பத்மநாபன் திருவனந்தபுரத்துக்காரர். ஏன், புதுமைப்பித்தன் இறுதி நாள்களை அங்குதான் கழித்தார்.

மேற்சொன்ன ஆளுமைகளைப் போன்று, ஆ.மாதவன், கொடுமலையாளக் குடியிருப்பில் வாழ்ந்து, பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் கற்ற தமிழ் எழுத்தாளர். 1955 முதல் அறுபது ஆண்டுகளாக எழுதுபவர். தமிழில் பட்ட மேற்படிப்பு கற்றவருக்கு வாய்க்காத சொல்வளம் பள்ளியில் தமிழே கல்லாத ஆ.மாதவனுக்கு வாய்த்தது. திருவனந்தபுரம் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மாரிமுத்து போன்ற பலரின் பணிகளையும் நாம் மறக்க முடியாது.

திருவனந்தபுரம் மட்டுமல்லாமல் கொச்சி, எர்ணாகுளம், கோட்டயம், பாலக்காடு, ஆலப்புழை எனப் பல பகுதிகளில் இருந்து இப்படி பல தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றனர். அவர்களைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், திமுக செய்தித்தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon