மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது!

காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது!

சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெசன்ட் நகர் கடற்கரையில் கூடி, காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கணபதி ரவி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பெண்கள் பலரும் பங்கேற்றனர்.

சீர்வரிசை, தாலி, தட்டுக்களுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர், கடற்கரையில் இருந்த காதலர்களை நோக்கி முழக்கங்களை எழுப்பி திருமணம் செய்து வைக்க முற்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், பெண்கள் உட்பட 100 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon