மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

காலிப் பணியிடங்களும் பகோடாவும்!

காலிப் பணியிடங்களும் பகோடாவும்!

மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய பட்ஜெட் பற்றி விளக்க உரையாற்றினார் முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தங்கபாலு, வசந்தகுமார், நக்மா உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்த நிலையில் பொதுக்கூட்ட வளாகத்தில் நெடுநெடுவென நின்ற காமராஜர் கட் அவுட்கள் பொதுமக்களை மட்டுமல்ல, பத்திரிகையாளர்களையும் ஈர்த்தன. விசாரித்தால் தி.நகர் காங்கிரஸ் பகுதி தலைவர் நாச்சிகுளம் சரவணன் தான் காமராஜருக்கு பல கட் அவுட்டுகளை வைத்திருந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான கராத்தே தியாகராஜன் பட்ஜெட் பார்க்காமல் தாராளமாகச் செய்திருந்தார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை, நெடுந்தூரம் வரை போடப்பட்ட நாற்காலிகள், வண்ண வண்ண விளக்குகள் எல்லாம் மோடியின் மீதான காங்கிரஸின் நம்பிக்கையைப் பறைசாற்றின.

தலைவர்களின் பேச்சுக்குப் பின் இரவு 8.20 மணியளவில் பேசத் தொடங்கினார் ப.சிதம்பரம்.

“ஹர்திக் பட்டேலுக்கும், ஜிக்னேஷ் மேவானிக்கும் அண்மையில் குஜராத் தேர்தலில் திரண்ட கூட்டம் இருக்கிறதே... அது சாதியத்துக்காகத் திரண்ட கூட்டமா? இல்லை. வேலையில்லை என்ற கோபமும், குமுறலும்தான் இளைஞர்களை இப்படித் திரள வைத்தது. அதனுடைய விளைவுதான் குஜராத் தேர்தல் முடிவுகள். அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 150 இடங்கள் பிடிப்போம் என்றார் அவர். பெரிய கோடீஸ்வரர்களின் மாநிலம் குஜராத். நரேந்திர மோடியின் ஒவ்வொரு பேரணிக்கும் கோடிக் கணக்கில் செலவழித்தார்கள்.

ஒரு மாநிலத் தேர்தலிலே ஒரு பிரதமர் 30, 40 முறை பேசுவது என்பது இதுவரை நடந்ததே கிடையாது. இத்தனையும் செய்தும் பிஜேபிக்குக் கிடைத்த இடங்கள் 99. காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த இடங்கள் 80.

15 வாக்குச் சாவடிகளிலே 2014ஆம் ஆண்டு தேர்தலிலே கிடைத்த வாக்குகள் 2017 சட்டமன்றத் தேர்தலிலே கிடைத்திருந்தால், நமக்கு இன்னும் ஐந்து சீட்டுகள் கூடுதலாகக் கிடைத்திருக்கும். சரத்பவாரோடு உடன்பாடு எட்டப்பட்டிருந்தால் நமக்கு ஒரு சீட் கூடியிருக்கும், அவருக்கும் ஒரு சீட் கிடைத்திருக்கும். இப்படிப்பட்ட சிறு சிறு காரணங்களால் நாம் ஏழு சீட்டுகளை இழந்துவிட்டோம்” என்று காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைத் தவறுகளையும் தமக்கே உரிய பாணியில் சுட்டிக்காட்டினார் ப.சி.

தொடர்ந்து பேசிய அவர், “குஜராத் என்பது விதிவிலக்கல்ல... குஜராத் என்பது லாட்டரியில் விழுந்த பரிசல்ல. குஜராத் தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸ் ஊழியர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. அடுத்து ராஜஸ்தானில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது எல்லாம் ஏதோ யதார்த்தமாக நடக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள். மக்கள் மனத்தில் ஒரு மனப்புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இளைஞர்களிடையே மனப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறப் போகிறது.

நான்காண்டுகளுக்கு முன்னால் ஒரு கையாலாகாத அரசிடம் இந்த ஆட்சியை ஒப்படைத்துவிட்டோம். விவசாயம் வீழ்ந்துவிட்டது. வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. இருந்த வேலைவாய்ப்புகள் எல்லாம் அழிந்துவிட்டன.

இந்த அரசுக்கு அரசியல் செய்யத் தெரியும். உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கத் தெரியும். வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டியணைக்கத் தெரியும். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தை நடத்தத் தெரியாது.

வேலை எங்கே, வேலை எங்கே என்று கேட்கிறார்கள். என்னுடைய காரைக்குடி நகரத்தில் கேந்திரியா வித்யாலயாவில் பல ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சி.ஆர்.பி.எஃப் படையில், பி.எஸ்.எஃப் படையில் பல பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. துணை ராணுவத்தில் 75 ஆயிரம் பணியிடங்கள் காலி. மத்திய அரசு பணியிடங்களில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த வேலையெல்லாம் நிரப்பாமல் பகோடா போடச் சொல்கிறார் மோடி.

இவர்கள் கும்பமேளாவை நடத்தட்டும். ஒலிம்பிக் கூட நடத்தட்டும். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தை நடத்துவதற்கு இவர்களுக்கு தகுதியே கிடையாது. இவர்கள் கையில் சிக்கி இந்தியப் பொருளாதாரம் சீரழிகிறது.

ஓராண்டு சகித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஓராண்டு கழித்தோ, ஓராண்டுக்குள்ளோ வரும் தேர்தலில் இந்தியப் பொருளாதாரத்தைத் திறம்பட நடத்துபவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் நீங்கள் நிம்மதியாக உறங்கலாம்” என்று முடித்தார் ப.சிதம்பரம்.

- ஆரா

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon