மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: இந்தியாவுக்கென ஒரு வால்டேர் ஏன் தேவைப்படுகிறார்?

சிறப்புக் கட்டுரை: இந்தியாவுக்கென ஒரு வால்டேர் ஏன் தேவைப்படுகிறார்?

அப்துல் ஷாபான்

சகிப்புத்தன்மையற்ற போக்கு, குறுகிய மனப்பான்மை, வெறுப்பு, வன்முறை ஆகியவை இந்தியாவில் கவலைகொள்ளும் நிலையில் அதிகரித்துவருகின்றன. செயல்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் கொலை செய்யப்படுவதும், கருத்து வெளிப்பாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதும் சுதந்திரமான குரல்களை அடக்கும் முயற்சிகள். இந்த அச்சுறுத்தும் சூழல், சுதந்திரமாகச் சிந்திப்பது, காரண காரியங்களை ஆராய்வது, எதையும் பகுத்தறிந்து பார்ப்பது ஆகியவற்றையே வேலையாகக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை.

இந்தியச் சமூகம் பல மகாத்மாக்களையும், விளிம்புநிலை மக்களுக்கான இறை தூதர்களையும் சமூக சீர்திருத்தவாதிகளையும் பல்வேறு வகையான குருமார்களையும் உற்பத்தி செய்துள்ளது. ஆனால், அவர்கள் யாராலுமே தாங்கள் சார்ந்திருந்த இடம், பிரிவைத் தாண்டி பெரிதாக எதையும் சாதித்துவிட முடியவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, மக்களின் சிந்தனையை மாற்றாமலேயே தன் அமைப்புகளை மாற்றவும் சமூகத்தை நவீனப்படுத்தவும் நாடு முயன்றது. அதனால்தான் நாட்டின் அமைப்புகள் பலவீனமாகி மக்கள் மீண்டும் தங்கள் பழைமையான நடைமுறைகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். பாலினம், சாதி, மதம், மூடநம்பிக்கைகள், குறுகிய தேசியவாதம் என எதுவாக இருந்தாலும் இந்தப் போக்கே நிலவுகிறது.

அறிவுச் சுடரை ஏற்றியவர்

பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் வால்டேர் என்று அழைக்கப்பட்ட பிரான்சுவா-மரி அரூட் (1694-1778) போன்ற ஒருவர் இந்தியாவுக்குத் தேவை. அதாவது, இந்தியத் தன்மை கொண்ட வால்டேர். இவர் தன் பேனாவின் வலிமையால் ஐரோப்பாவில் பெருமளவில் மேலாதிக்கத்தன்மையை ஒழித்தவர். நாடு கடத்தல், சிறைத் தண்டனை, இவரது பல படைப்புகளுக்கான தடை என அனைத்தையும் எதிர்கொண்டு மத வெறி, அநீதிக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை நடத்தினார். பிரான்ஸ் நாட்டை அறிவொளிப் பாதைக்குத் திருப்பியவர். வால்டேரால்தான் பிரான்ஸ் நாடே சிந்திக்கத் தொடங்கியது என்றுகூடச் சொல்லப்படுவதுண்டு.

மத ரீதியாக சகிப்புத்தன்மையற்ற நிலவரத்தின் ரத்தம் தோய்ந்த நிலவரத்தை வால்டேர் விரிவாகவும் விமர்சித்தும் எழுதினார். நீட்சே போல இவர் ஒரு நாத்திகர் அல்ல. இவர் ‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று நம்பியவரில்லை. ஆனால், அனைத்தையும் விஞ்சிய ஒரு மேன்மையான இருத்தல் அல்லது பாரம்பர்ய மாறாநிலை வாதத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத பகுத்தறிவு மதம் என்ற கருத்துருவில் நம்பிக்கை கொண்டிருந்தார். மத வெறி, விக்ரக ஆராதனை, மூட நம்பிக்கை ஆகியவற்றை வெறுத்தார். மதக் கோட்பாடு என்ற சிறிய அடையாளத்தைப் பாதுகாக்க மக்கள் ஒருவரையொருவர் கொலையும் செய்யத் துணியும் நிலையை இவர் தூற்றினார். தங்கள் அதிகாரத்தின் அஸ்திவாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள எதையும் எளிதில் நம்பிவிடும் சாமான்ய மக்களின் நம்பிக்கைகளைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் மத குருக்களை வெறுத்தார். இங்கிலாந்தில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எனப் பல மதக் கலாசாரம் கொண்டவர்கள் பரஸ்பரம் அமைதியாக வாழ்ந்து, வியாபாரத்தில் ஈடுபட்டு அவரவர் இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதை இவர் பாராட்டினார்.

ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கும் ஓரிடத்தில் கொடுங்கோல் ஆட்சிதான் நிலவும் என்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் இங்கிலாந்து போன்ற இடங்களில் சமூக அமைதிக்கு வழிகோலும் என்றும் வால்டேர் நம்பினார். மற்ற நாடுகளை வெறுப்பதை அடிப்படையாகக் கொண்ட பிரெஞ்சு தேசபக்தி என்ற கருத்துருவையும் இவர் வெறுத்தார்.

நையாண்டி பாணியில் வால்டேர் எழுதிய ஃபிராசஃபிகல் டிக்ஷ்னரி என்ற நூலில் இவரை ஒரு பூதம் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது. இருபத்தி மூன்றாயிரம் யூதர்கள் ஒரு கன்றுக்குட்டிக்கு முன்பாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். தத்துவார்த்த மோதல்களால் பரஸ்பரம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவர்கள், ஞானஸ்நானம் செய்யப்படாமல் இருந்த பன்னிரண்டு மில்லியன் அமெரிக்க உள்ளூர் மக்கள் என அங்கு மதத்தின் பெயரால் கொலை செய்யப்பட்ட மக்களின் எலும்புக் குவியல்களை இவர் பார்த்தார்.

சொர்க்கத்தில் பல தத்துவவாதிகளுடன் சாக்ரடீஸையும் வால்டேர் சந்திக்கிறார். சந்திரன், புதன், வீனஸ் ஆகியவற்றின் தெய்விக அம்சத்துக்குப் பதிலாக பிரபஞ்ச சக்தியிடம் நம்பிக்கை கொண்ட குற்றத்துக்காக எவ்வாறு தந்திரபுத்தி கொண்ட ஒரு மதகுருவின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட சதியால் கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டார். மக்கள் தத்துவவாதிகளைக் கொல்லும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பதை இதன் மூலம் குறிப்பிடுகிறார் வால்டேர்.

அடுத்து, ரோம நாட்டின் இரண்டாவது மன்னர் நூமா பாம்பில்லியஸ் பற்றி எழுதுகிறார். அவர் எவ்வாறு நல்லொழுக்கத்தையும் இறைவனின் அன்பையும் நாகரிகமற்ற, போர்வெறி கொண்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் என்பதைச் சொல்கிறார். ரோம நாட்டு மக்கள் அவரது மரணத்துக்குப் பின் இரண்டையும் மறந்துவிட்டனர் என்பதையும் சொல்கிறார்.

நேசிக்கச் சொன்னவனின் கதி

அந்த நாவலில் வால்டேர், ரத்தம் சிந்திக்கொண்டிருந்த, வீங்கிப்போன கால்களுடன் கூடிய ஒரு மனிதனைச் சந்திக்கிறார். அவரது உடலின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிடப்பட்டிருக்கிறது. விலாப் பகுதிகளும் சவுக்கடியால் சதை பிய்ந்திருந்தன. உங்களுக்கு ஏன் இந்த நிலை என்று வால்டேர் கேட்கிறார். சாக்ரடீஸ் போல நீங்களும் வீனஸ், மெர்க்குரி, சந்திரன் ஆகியவற்றைக் கடவுள் என்று நம்ப மறுத்தீர்களா அல்லது அவர்களுக்குப் புதிய மதத்தை போதனை செய்ய விரும்பினீர்களா என்று கேட்கிறார்.

அம்மனிதன் அவரிடம், அப்படி எதுவும் இல்லை என்று கூறினார். தான் எப்போதுமே வழிபாட்டுத் தலத்துக்குச் செல்வேன் என்றும் சுன்னத்கூட செய்துள்ளேன் என்றும் கூறினார். இவர் அவர்களிடம் கூறிய ஒரே விஷயம் இதுதான், ‘இறைவனை நேசியுங்கள், உங்கள் சக உயிர்களை உங்களைப்போலவே நேசியுங்கள் என்றேன். நான் அவர்களுக்குப் புதிய மதத்தை அறிமுகம் செய்கிறேன் என்று முடிவு செய்து என்னைக் கொன்றுவிட்டனர்’ என்று கூறினார்.

கத்தி மூலம் அமைதியை நிலைநாட்டச் சொன்னீர்களா என்று வால்டேர் கேட்கிறார். அதற்கு அந்த மனிதன், ‘நான் அமைதியைக் கொண்டு வாருங்கள், கத்தியை அல்ல என்று கூறினேன்’ என்கிறார்.

வால்டேர் கதையிலிருந்து பெறும் நீதி

மத வெறி ஒரு மனதைச் சீர்குலைத்த பிறகு, அது ஏறக்குறைய குணப்படுத்த முடியாத நோயாகிவிடுகிறது. இத்தகைய தொற்று உண்டான மனிதன் தன்னோடு முரண்படும் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யும் மனநிலைக்கு வந்துவிடுகிறார். இந்தப் பிணிக்கான ஒரே நிவாரணம் தத்துவவாதக் கண்ணோட்டம்தான். இது மனிதர்களின் பழக்க வழக்கங்களை மாற்றி மத வெறி நோய் வேரோடிப் போகாமல் தடுக்கிறது. உண்மையில் மதம் தொற்றுப் பீடித்த மூளைகளுக்கு ஆரோக்கிய உணவாக மாறுவதற்குப் பதிலாக அதில் நச்சுத்தன்மையை ஏற்றிவிடும் தன்மை கொண்டது என்பது வால்டேரின் கருத்து. உலகுக்கு நன்மை பயக்கும், நாகரிகத்தைச் சுமந்து வரும், ஞானம் பெற வைக்கும் அபாரமான திறன் கொண்டுள்ளது மதம். ஆனால், அதுவே ஒருவரை ஒருவர் கொல்வதற்கும் வழிவகுக்கிறது.

கத்தோலிக்க நகர் ஒன்றில் மதவெறி கொண்டு செயல்பட்ட நீதிபதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபரைப் பார்த்தார். அவரைக் காப்பாற்ற இவர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார், அதிகாரிகளுக்குக் கடிதங்கள் எழுதினார். இறுதியில், பாரீஸ் நீதிபதிகளால் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. செயல்படத் தயாராக உள்ள தத்துவவாதிகளால் தங்கள் கருத்துகள் மூலம் பொதுக் கருத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை வால்டேர் இதன் மூலம் எடுத்துக்காட்டினார்.

மத சகிப்புத்தன்மை அற்ற நிலவரம், குறுகிய மனப்பான்மை, மதவெறி ஆகியவற்றுக்கு எதிராகவும் காரண காரியத்தை ஆராய்ந்து செயல்படுதல், பகுத்தறிவு, பன்முக கலாசாரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குமான வால்டேரின் போராட்டங்கள் அசாதாரணத் தன்மை வாய்ந்தவை. இவரது கருத்துகளுக்கு பிரான்ஸ் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம், இவர் மறைந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பிரதிபலித்தன. பிரான்ஸ் அதிபர், சார்லஸ் டு கோல், 1968 கிளர்ச்சியில் கலந்துகொண்ட இருத்தலியல் தத்துவவாதி ழான் பால் சார்த்ரேவைக் கைது செய்யும் பரிந்துரையை மறுத்து, ‘நாம் வால்டேரைக் கைது செய்ய முடியாது’ என்று கூறினார். வால்டேரின் முன்னுதாரணத்தைக் கொண்டு இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் அப்துல் ஷாபான். துல்ஜாபூர் வளாகத்தில் உள்ள டாட்டா நிறுவனத்தில் சமூக அறிவியல்களுக்கான துணை இயக்குநர்.)

நன்றி: https://qrius.com/india-needs-volatire/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon