மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘டுலெட்’!

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘டுலெட்’!

பெங்களூருவில் நடைபெறவிருக்கும் 10ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் உருவான ‘டுலெட்’ திரைப்படம் கலந்துகொள்கிறது.

2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, 2009ஆம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்பட விழா கடந்த ஆண்டு பெங்களூருவிலும், மைசூரிலும் நடந்தது. இந்த முறை பெங்களூருவில் மட்டும் நடைபெறுகிறது.

சர்வதேச திரைப்பட விழா குறித்து கர்நாடக மாநில செய்தித் துறை செயலர் பங்கஜ் குமார் பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் 10ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வரும் 22ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக சர்வதேச அளவில் 800 திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக 60 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்கள் விழாவின்போது திரையிடப்படும்.

சர்வதேச, ஆசிய, இந்திய, கன்னட ஆகிய நான்கு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் படங்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல்வர் சித்தராமையா விருது வழங்குவார். தாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுகின்றன. தமிழில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டுலெட்’ திரைப்படமும், பிரசன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர் ‘அசோக மித்திரன்’ என்கிற ஆவணத் திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குறித்த ஆவணப்படம், கருத்துரிமை தொடர்பான இரண்டு ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. விழாவில் திரைத்துறை ஆளுமைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது கர்நாடக திரைப்படத் துறை அகாடமியின் தலைவர் ராஜேந்திரசிங் பாபு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon