மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஸ்டாலினிடம் ஆய்வுக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

ஸ்டாலினிடம் ஆய்வுக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

போக்குவரத்து சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு நேற்று ஸ்டாலினிடம் தங்களது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைச் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த 26ஆம் தேதி ஐவர் குழு அமைக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு மற்றும் தொமுச சண்முகம், செங்குட்டுவன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவானது கடந்த 15 நாள்களாக அண்டை மாநிலங்களில் உள்ள போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், பேருந்து கட்டணங்கள், தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஆய்வு முடிந்த நிலையில், குழுவானது போக்குவரத்துத் துறையை சீர்ப்படுத்த தங்களுடைய பரிந்துரைகளை அறிக்கையாகத் தயார் செய்து, நேற்று (பிப்ரவரி 11) திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அவரது இல்லத்தில் வழங்கியுள்ளது. சுமார் 62 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் எப்படி போக்குவரத்துத் துறையை லாபத்துக்குக் கொண்டுசெல்வது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போராட்டங்கள் மட்டும் நடத்தாமல் கட்டண உயர்வுக்கான தீர்வை ஆய்வு செய்துள்ளதன் மூலம் ஓர் ஆக்கப்பூர்வமான அரசியல் செயல்பாட்டை திமுக முன்னெடுத்திருப்பது அரசியல் அரங்கில் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளைக் காரணம் காட்டி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் கட்டணம் கடந்த மாதம் 19ஆம் தேதி திடீரென உயர்த்தப்பட்டது. பொதுமக்களை மிகவும் பாதித்த நிலையில், இதற்கு எதிராக மாணவர்களும் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon