மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளை ஏமாற்றுகிறதா பாஜக!

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளை ஏமாற்றுகிறதா பாஜக!

ரமன்தீப் சிங் மான்

அண்மையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் இந்தியாவின் வேளாண் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும், அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும் கூறியிருந்தார். ஜேட்லி ஒரு விநோதமான நிலைப்பாட்டையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். மோடி அரசு ஏற்கெனவே பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவிகிதத்துக்கு மேல் வழங்கி வருகிறது. இப்போது வெளியான பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி விலையிலிருந்து 1.50 மடங்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த நேரத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்பு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நாளில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் மத்திய அரசு வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு அதன் உற்பத்தி விலையை விட 50 சதவிகிதத்துக்கு மேல் வழங்க முடியாது. 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கினால் சந்தையில் விலை அதிகரிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தது. தொடக்கத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை எதிர்பார்ப்பைத் ஏற்படுத்தியது. ஆனால், மத்திய அரசு ஏற்கெனவே குறைந்தபட்ச இறக்குமதி விலை உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் கூடுதலாகத் தான் வழங்கி வருகிறது. மத்திய அரசு இதை மிகைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலையை வேளாண் பொருள்களின் உற்பத்தி செலவிலிருந்து 1.50 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டுமென்று எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை பரிந்துரைத்துள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதை வாக்குறுதியாகவும் அளித்திருந்தது. சுவாமிநாதன் தனது அறிக்கையில் உற்பத்தி செலவை விட 50 சதவிகிதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உற்பத்திக்கான முறையான செலவு விவரங்களை இன்றுவரை கணக்கிட்டு அறியவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏ2, ஏ2+எஃப்.எல், சி2 ஆகிய மூன்று வகைகளில் குறைந்தபட்ச ஆதாரத் தொகை வழங்கப்படுகிறது. ஏ2 என்றால் உண்மையான செலவுக்கு ஏற்றபடி குறைந்தபட்ச ஆதார விலை வழங்குதல் (விவசாயக் கூலிகளுக்கான ஊதியம், மாட்டு வண்டி, இயந்திர செலவுகள், விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், பாசன செலவுகள் மற்றும் இதர செலவுகள் உட்பட எல்லா செலவுகளையும் கணக்கிட்டு வழங்குதல்), ஏ2+எஃப்.எல் என்றால் ஏ2வில் வழங்கப்படுகின்ற செலவுகளுடன் சேர்த்து குடும்ப வருவாயையும் கணக்கிட்டு வழங்குதல். சி2 என்றால் ஏ2+எஃப்.எல் முறையுடன் சேர்த்து நிலத்துக்கான வாடகை மற்றும் சொந்த நிலத்தின் மீது வாங்கப்பட்டுள்ள கடன் தொகை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு சி2 முறையில் குறைந்தபட்ச ஆதாரத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இப்போதைய அறிவிப்புகள் அவற்றைக் கொல்வதாக உள்ளது. கோதுமைக்கான ஏ2+எஃப்.எல் மற்றும் சி2 முறைகளைக் கணக்கில் கொண்டால் மிகப்பெரிய வேறுபாடு நிலவுகிறது. செலவு மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் தகவல்களின்படி, “2018-19ஆம் ஆண்டு ராபி பருவத்தில் கோதுமையின் விலை குவிண்டாலுக்கு ரூ.817 ரூபாயாக ஏ2+எஃப்.எல் முறையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் 50 சதவிகித குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தால் கோதுமைக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,225.50 கிடைத்திருக்கும். ஆனால், மத்திய அரசு ராபி பருவத்துக்கான கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.1,735 ஆக நிர்ணயித்துள்ளது.

சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி விவசாயிகளுக்கு இப்போது கிடைக்க வேண்டிய 509.50 ரூபாய் குவிண்டால் ஒன்றுக்கு கிடைத்திருந்தால் ஏன் அவர்கள் சாலைகளில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட போகின்றார்கள்? 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அளித்த சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துவதில் ஏன் பிரதமர் மோடி அழுகிறார்? சுவாமிநாதன் அறிக்கையின்படி, விவசாயிகள் சி2 முறையில்தான் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டனரே தவிர ஏ2+எஃப்.எல் முறைப்படி அல்ல.

கோதுமையை எடுத்துக்கொள்வோம். சி2 முறைப்படி கணக்கிட்டால் இதன் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,256 ஆக உள்ளது. இதனுடன் 50 சதவிகித லாபத் தொகையை சேர்த்தால் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,884 ஆகிறது. ஆனால், ராபி பருவத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதோ குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,735 ஆகும். அரசாங்கம் சி2 முறைப்படி வழங்கியிருந்தால் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.149 கிடைத்திருக்கும். ஆனால், விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை.

இந்தியாவில் நெல்லுக்கும், கோதுமைக்கும் மட்டும்தான் ஓரளவு கூடுதல் விலை வழங்கப்படுகிறது. அதேபோல மற்றொன்றையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. வெறும் 6 சதவிகித விவசாயிகள் மட்டும்தான் குறைந்தபட்ச ஆதார விலைக்குப் பொருள்களை விற்பதாக சாந்த குமார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. மத்திய அரசு வாக்குறுதி அளித்தது போல சி2 முறைப்படி 50 சதவிகித லாபத்தொகையை விவசாயிகளுக்கு அளிக்காததால் 94 சதவிகித விவசாயிகள் பயனடையவில்லை.

நாட்டின் பெரும்பான்மை விவசாயிகள் குறைந்த அளவிலான நிலம் கொண்டவர்கள். ஆனால், அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை கிடைக்கவில்லை, அதேநேரத்தில் உற்பத்தி மிகுந்துள்ளது. மேலும், இவர்களின் நிறுவனக் கடன் விகிதமும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வுக்கான மத்திய அரசு சந்தை உத்தரவாதத் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விலை வீழ்ச்சி ஏற்படும்போது மாநில அரசு விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும். நெல் மற்றும் கோதுமை தவிர மற்ற பொருள்கள் மட்டும் இம்முறையில் கொள்முதல் செய்யப்படும். இப்போது விலைவீழ்ச்சி அடைந்துள்ளது. நமக்கு எழும் மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் வெறும் 500 கோடி ரூபாய் எதற்குப் பயன்படும்? 2014-15ஆம் நிதியாண்டில் எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாகவும், காய்கறிகள் மற்றும் பழங்கள் மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்தச் சூழலில் வெறும் 500 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி கொள்முதல் செய்வது சாத்தியமாகும்?

2015-16ஆம் நிதியாண்டில் விவசாயிகளின் தோராய வருவாய் ரூ.96,703 கோடியாக இருந்ததை 2022-23ஆம் நிதியாண்டுக்குள் ரூ.1,93,406 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கு அசோக் தல்வாய் தலைமையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் கணிப்புப்படி 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கக் கூடுதல் முதலீடாக ரூ.6.4 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 4,845 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கத் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள ரூ.6.4 லட்சம் கோடி பற்றி மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காத்துள்ளது. இத்தகைய குறைபாடுகள் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் மிகப்பெரிய பணியை நோக்கி அரசாங்கத்தின் மோசமான அணுகுமுறையைக் காட்டுகின்றன.

அதேபோல விவசாய ஊதியக் கமிஷனை அமைக்க வேண்டிய தேவையும் உள்ளது. விவசாயிகளின் குடும்பங்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய உறுதியை இதன்மூலம் வழங்கலாம். இந்த உறுதிப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகையை அவர்களின் தேவைகளுக்காக வழங்க வேண்டும். இதுதான் சப்கா சத் சப்கா விகாஸ் (எல்லோருடைய வளர்ச்சி) முழக்கத்தின் உண்மையான கூற்றாக இருக்கும்.

(கட்டுரையாளர் ரமன்தீப் சிங் மான் ஒரு பொறியாளர். விவசாயம் சார்ந்தும், விவசாயிகளின் பிரச்னைகள் சார்ந்தும் எழுதுவதில் பயிற்சி பெற்றவர்)

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon