மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கர்நாடகா: தேர்தல் சிறப்புக் காட்சிகள்!

கர்நாடகா: தேர்தல் சிறப்புக் காட்சிகள்!

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டன.

கர்நாடகச் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என காங்கிரஸும், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என பாஜகவும் திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றன. பாஜக தலைவர் அமித் ஷா உட்படப் பலர் கர்நாடகாவுக்குச் சென்று கட்சியைப் பலப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொப்பல் மாவட்டம் சென்று பிரசித்தி பெற்ற ஹூலிசும்மா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கவி சித்தேஸ்வரா மடத்துக்குச் சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.

நேற்று (பிப்ரவரி 11) கொப்பல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், “கர்நாடக மாநிலத்தில் ஆளும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ஆனால், இதற்கு முன் மாநிலத்தை ஆண்ட மூன்று முதல்வர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. ஊழலில் பாஜக உலக சாதனை படைத்துவிட்டது.

மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, சுரங்க ஊழலில் இருந்து ஒவ்வோர் ஊழலாக வெளியே வந்து கொண்டு இருந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக கர்நாடகாவில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை.

ஊழல் குறித்துப் பேசும் பிரதமர் மோடி, கர்நாடக மாநிலத்தில் தங்களின் சொந்தக் கட்சியினர் ஆட்சி செய்தபோது, செய்த ஊழல் சாதனையையும் பார்க்க வேண்டும்.

கடந்த பாஜக ஆட்சியில் மூன்று முதல்வர்களும், நான்கு அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக சிறைக்குச் சென்றனர்” என்று பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விவசாயிகளைச் சந்தித்து அவர் பேசினார்.

இதற்கிடையே பாஜகவும் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஏழை வாக்காளர்களைக் கவரும் விதத்தில் காந்தி நகரில் உள்ள லக்ஷ்மண நகர் குடிசை பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற எடியூரப்பா அங்குள்ள வீடு ஒன்றிலேயே இரவு தங்கினார். அவருடன் பாஜக எம்.பி பி.சி.மோகன் உட்பட சிலர் தங்கினர்.

பின்னர் உரையாற்றிய எடியூரப்பா, “வறுமையை ஒழிப்பதற்கு காங்கிரஸ் குறைந்த ஆர்வமே கொண்டுள்ளது. நாடு விடுதலையடைந்த 70 ஆண்டுகள் கடந்தும் மக்கள் குடிசை பகுதியில் வசிக்கின்றனர். தேர்தலுக்காக என்றில்லை, மனசார இந்த மக்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்காத நிலையிலே இரு கட்சிகளும் போட்டிப்போட்டு தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon