மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கர்ப்பிணிகளுக்கு 102 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை!

கர்ப்பிணிகளுக்கு 102 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை!

கர்ப்பிணிப் பெண்களுக்காக, 24 மணி நேரமும் செயல்படும் தாய் - சேய் நல உதவி மையம் மற்றும் 102 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை ஆகிய சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்புத் துறை இணைந்து, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தகுந்த நேரத்தில், கர்ப்பகால சிகிச்சை அளிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்து, 12 இலக்க எண் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற இந்த எண் அவசியமானது. இதன் அவசியத்தை மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பெண்களுக்குக் கர்ப்பம் உறுதி செய்த நாளில் இருந்து, குழந்தை பிரசவிக்கும் நாள் வரை சிகிச்சை அளித்தல், ஆய்வகப் பரிசோதனை மற்றும் தொடர் பராமரிப்பு ஆகியவை அளிக்கப்படும். இதற்காக, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தாய் - சேய் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணி பெண்கள், மருத்துவமனைக்குச் செல்ல 102 என்ற இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

“24 மணி நேரமும் செயல்படும் தாய் - சேய் உதவி மையம் மற்றும் 102 ஆம்புலன்ஸ் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தொடர் சிகிச்சை அளிக்கப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுரை வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களின் நலனில் பொது சுகாதாரத் துறை மிகவும் அக்கறை காட்டுகிறது” என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon