மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு!

மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு!

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரியும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெறக் கோரியும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று (பிப்ரவரி 11) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் ஆர்.சக்திராஜன் தொடங்கி வைத்தார்.

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விழுக்காட்டைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடமே வழங்கிடும் வகையில், எம்.சி.ஐ விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மலைப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி (AYUSH) மருத்துவர்கள் நவீன அறிவியல் மருத்துவம் பயில வழி வகுக்கும் இணைப்புப் படிப்புத் திட்டத்தை கைவிட வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிட வேண்டும். தேசிய நலப் பாதுகாப்புத்( National Health Protection Scheme) திட்டம், கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியை அபகரிக்கும் வகையிலும், பொதுச் சுகாதாரத் துறையை வலுவிலக்கச் செய்யும் வகையிலும் உள்ளது.

எனவே, அதைக் கைவிட்டு, அதற்கான நிதியைக்கொண்டு அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் தொடங்கிட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திட வேண்டும்.

தேசிய நலப் பாதுகாப்புத் திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு வழங்கிட வேண்டும். உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது போல் 100 விழுக்காடு இடங்களையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கிட வேண்டும்.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களையும், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இடங்களில் இளநிலை, முதுநிலை உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 65 விழுக்காட்டு இடங்களையும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கிட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில், மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் அவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். அதற்கு, இத்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேசிய உரிமத் தேர்வு (National Licenseate) என்ற ‘எக்ஸிட்’ தேர்வைப் புகுத்தக் கூடாது.

தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றதாக இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்தார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon