மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஷாப்பிங் ஸ்பெஷல்: இளைய தலைமுறை விரும்பும் பிளாட்டினம்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: இளைய தலைமுறை விரும்பும் பிளாட்டினம்!

மணிக்கொடி

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டவை வைரமும் பிளாட்டினமும்தான். இதில் வைரத்தின் விலை மிக அதிகம். ஆனால், பிளாட்டினத்தின் விலை இன்றைக்குத் தங்கத்தைவிட குறைவாக உள்ளது. இதனாலேயே பலரும் பிளாட்டினம் நகைகளை வாங்கத் தொடங்கி இருப்பது ஆச்சர்யம் தரும் வளர்ச்சி. கடந்த அட்சய திருதியை அன்று பிளாட்டினம் நகைகளின் விற்பனை 25% அதிகரித்துள்ளதே இதற்கு ஒரு சான்று. திடீரென பிளாட்டினத்துக்கு மவுசு வர என்ன காரணம், தங்கம் போல பிளாட்டினமும் முதலீடு செய்வதற்கு ஏற்றது தானா என்கிற கேள்விகளுக்குப் பதில் காணும்முன், பிளாட்டினத்தின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

பிளாட்டினத்தின் கதை

கி.மு. 700ஆம் ஆண்டிலேயே வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது இந்தப் பிளாட்டினம். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் நாட்டில் பிளாட்டினத்தின் பயன்பாடு பெரிய அளவில் உருவானது. ஸ்பானிஷ் மக்கள் அதை பிளாட்டினா என்று அழைத்தனர். சிறிய வெள்ளி என இதற்கு அர்த்தம். முதல் உலகப் போரின்போது, உலக அளவில் மிகச் சிறந்த பிளாட்டினத்தை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது கனடா. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல துறைகளில் பிளாட்டினம் பயன்படுத்துவது அதிகரித்தது. குறிப்பாக, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக் துறைகளில் பிளாட்டினத்தின் தேவை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

ஆபரணத் தேவை

ஜப்பானில் 1960இல் பிளாட்டினத்தை நகையாக அணிய விரும்பினார்கள் மக்கள். பிளாட்டினத்தின் சுத்தத் தன்மை, அதன் வெண்மையான நிறம் மற்றும் சமுதாயத்தில் மதிப்பு போன்ற காரணங்களால் பிளாட்டினத்தை வாங்க விரும்பினார்கள் மக்கள். அதன் பிறகு சுவிட்சர்லாந்து, இத்தாலி, லண்டன், அமெரிக்கா மற்றும் சீனாவில் பிளாட்டின ஆபரணங்களை மக்கள் விரும்பத் தொடங்கினார்கள். 1980களில் இதன் விலை அதிகரித்தபோது பார், காயின்கள் மற்றும் ஆபரணங்கள் என பிஸிக்கல் பிளாட்டினத்துக்குத் தேவை ஏற்பட்டது. உலகளவில் கடந்த 2012 வருடத்தில் இருந்து 45-50% ஆபரணத் தேவையில் பிளாட்டினம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பிளாட்டினத்துக்கான தேவை ஆண்டுக்கு 20% அதிகரித்து வருகிறது.

தொழிற்சாலை பயன்பாடுகள்

மருத்துவத் துறையில் பிளாட்டினத்தின் பயன்பாடு 1990ஆம் ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியது. புற்றுநோய், கார்டியாக் நோய்களைக் குணப்படுத்தவும் மற்றும் செயற்கை பற்கள் தயாரிக்கவும் பிளாட்டினம் பயன்படுத்தப்பட்டது. கணினிகளில் அதிகளவு தகவல்களைப் பதிந்து வைக்க ஹார்டு டிஸ்க்குகளில் காந்த அடுக்காகப் பயன்படுகிறது. எலெக்ட்ரானிக் பொருள்கள், செராமிக் சிப்கள், சர்க்யூட்டுகள், மோல்டிங் கண்ணாடிகள், சிந்தெட்டிக் ரப்பர், கார் இன்ஜின் கன்ட்ரோல் சிஸ்டம், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல துறைகளில் பயன்படுகிறது பிளாட்டினம் மற்றும் அதன் துணை உலோகங்கள். எல்.இ.டி. டி.வி. மற்றும் இதர புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலை தேவையில் 48% பிளாட்டினத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஏன் பிளாட்டினம் எடுபடவில்லை?

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டதாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகள் நம் மக்களிடம் பெரிய அளவில் எடுபடவில்லை. இதற்குப் பல காரணங்கள். முதல் காரணம், பண நெருக்கடி வந்தால் தங்கம் மாதிரி இதை அடகு வைக்க முடியாது. உடனடியாக விற்கவும் முடியாது. இரண்டாவது காரணம், கடந்த பல ஆண்டு காலமாக தங்க நகைகளைப் பார்த்துப் பார்த்து, அதையே அழகானதாக நினைக்கும் மக்கள் வெள்ளை நிற பிளாட்டினத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் நாளாகும். மூன்றாவதாக, பெண்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் நகையாக மட்டுமே இருக்கிறது பிளாட்டினம்.

மக்கள் ஆதரவு பிளாட்டினத்துக்கு பெரிய அளவில் இல்லை என்ற போதும், பல முன்னணி நகைக்கடைகள் பிளாட்டினத்துக்குத் தனி பிரிவு அமைத்து விற்பனை செய்து வருகின்றன. ‘இந்தியாவில் பிளாட்டினத்துக்கான வரவேற்பு எப்படி உள்ளது? மக்கள் பிளாட்டினத்தை அதிகளவில் வாங்குகிறார்களா?’ என அம்பிகா பேர்ல்ஸ் உரிமையாளர் அங்கூர் குப்தாவிடம் கேட்டபோது, “கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக 160 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது பிளாட்டினம். பிளாட்டினத்தின் மீது நம் மக்களுக்கு ஈர்ப்பு அதிகமாகி உள்ளது. பதினைந்து வயது முதல் நாற்பது வயதுள்ளவர்கள் பிளாட்டினம் வாங்க ஆவலாக இருக்கிறார்கள். கல்லூரி செல்லும் பெண்கள், பி.பி.ஓ மற்றும் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பிளாட்டினம் நகைகளை அணிவதைப் புது ஃபேஷனாக நினைக்கிறார்கள். நிச்சயதார்த்தங்கள், திருமணங்களில் பிளாட்டினம் மோதிரம் அணிவதை இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஆண்டுக்கு 2,400 டன் தங்கம் கிடைக்கிறது. ஆனால், பிளாட்டினமோ வெறும் 80 டன் மட்டுமே கிடைக்கிறது” என்று கூறினார்.

பெண்களுக்கு மட்டும் இல்லாமல், ஆண்களுக்கும் இருக்கிறது அசத்தல் ஆபரணங்கள். அதுவும் புது வரவாக வந்திருக்கும் பிளாட்டினம் நகைகள் கண்ணைப் பறிக்கின்றன. ஆனால், பிளாட்டினம் நகைகளை வாங்க விரும்பாதவர்கள், ஆனால் முதலீடு அடிப்படையில் அதை வாங்கி வைக்க விரும்புகிறவர்களுக்குச் சிறந்தது இ-பிளாட்டினம். இ-கோல்டு, இ-சில்வர் மாதிரி இப்போது இ-பிளாட்டினத்தையும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு கிராம் பிளாட்டினத்தைக்கூட வாங்கலாம்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon