மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தவன் அடித்த சாதனை சதம்!

தவன் அடித்த சாதனை சதம்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது போட்டியில் சதம் அடித்த தவன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் ஷிகர் தவன் தனது அதிரடியான ஆட்டத்தினால் பல்வேறு வெற்றிகளுக்கு உதவியுள்ளார். கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற தவன் இந்திய அணி வெளியூர் மைதானங்களில் விளையாடிய போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு உதவியுள்ளார். அதன்படி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர், நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

தவன் களமிறங்கிய 100ஆவது ஒருநாள் போட்டி இதுவாகும். எனவே 100ஆவது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பிற அணியைச் சேர்ந்த எட்டு வீரர்கள் அவர்களது 100ஆவது போட்டியில் சதம் அடித்துள்ளனர். அவர்களது பட்டியலில் தவன் தற்போது ஒன்பதாவது வீரராக இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் நூறு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர்கள் பட்டியலில் தவன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அவர் 100 போட்டிகளில் 4,309 ரன்களை மொத்தமாகச் சேர்த்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்க அணி வீரர் ஹசிம் அம்லா 4,808 ரன்களுடன் இடம் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி 100 போட்டியில் அதிக ரன்களைச் சேர்த்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். விராட் கோலி 4,107 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon