மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

பியூட்டி ப்ரியா: முத்த தின ஸ்பெஷல்!

பியூட்டி ப்ரியா: முத்த தின ஸ்பெஷல்!

இன்று முத்த தினம் (Kiss Day). காதலர்கள் இன்று அன்பான முத்தத்தைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், உதடுகள் அழகாக இருக்க வேண்டும் என்ற கவனமும் இருக்கும்.

உதட்டின் கவனத்தை இயற்கையாக கையாளும் முறையையும் செயற்கையான லிப்ஸ்டிக்கைச் சரியாக உபயோகிப்பது பற்றியும் இன்று முத்த தின ஸ்பெஷலாகப் பார்க்கலாம்.

தரக்குறைவாகத் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீஷியம் அதிக அளவில் உள்ளன. இதைப் பயன்படுத்தும்போது, கடுமையான நோய்க்கு ஆளாவதோடு, உறுப்புகள் பாதிப்படையும். அதிகப்படியான காட்மியமானது சிறுநீரகத்தில் படிந்தால், சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இவை தவிர ‘லிப்ஸ்டிக்’ தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பெட்ரோ கெமிகல்ஸ், பாரபின்ஸ் மற்றும் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு உள்ளிட்டவை, நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தி, இனப் பெருக்கம் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும். இதிலுள்ள பார்மால்டிஹைடு, புற்றுநோயைத் தூண்டும். கனிம எண்ணெய்கள் சருமத் துளைகளை அடைத்து உதடுகளின் இயற்கை அழகைப் பாதிக்கும்.

ஒரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டுவந்தால், வயிற்றில் கட்டிகள் வளரும். பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் இருக்கும் ‘ஈயம்’ நரம்புகளின் செயல்திறனைப் பாதிக்கும். தொடர்ந்து மூளையில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. மேலும், ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளும், மலட்டுத்தன்மையும்கூட ஏற்படலாம்

மொத்தத்தில் எவ்வளவு தரமான லிப்ஸ்டிக்காக இருந்தாலும், குறைவான உபயோகமே உடம்புக்கு நல்லது.

உதடு சிவப்பாகச் செய்ய வேண்டியவை:

அதிக குளிர் மற்றும் வெப்பத்தைத் தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.

இவற்றுக்கான சிகிச்சை முறைகள்:

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் கருமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவிவந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது எப்படி?

சிலருக்குத் தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதைப் போட்டுக்கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் அழகாக இருக்கும்.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களைச் சேர்த்து லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் எடுப்பாக இருக்கும்.

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும்போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாகத் தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரியவேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாகப் பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

பொதுவாக, இந்தியப் பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். உதடுகள் காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

அன்புக்கு வயது கிடையாது. எத்தனை வயது உடையவராயினும் சிறு முத்தமே அவர்களின் அன்பைத் துள்ளிக் குதித்திட வைக்கும். உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு மறக்காமல் இன்று ஒரு முத்தமளியுங்கள்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon