மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்... - மினி தொடர் - 2

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்... - மினி தொடர் - 2

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்மீது சபாநாயகர் மேற்கொண்ட தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று (பிப்ரவரி 8) தினகரனின் வீட்டில் கூடி ஆலோசித்திருக்கிறார்கள்.

சட்டக்கூறுகளின்படி தங்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றால், அதே சட்டக்கூறுகளின்படி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும் என்று அப்போது அந்த ஆலோனையில் பேசப்பட்டிருக்கிறது. அதாவது வரப்போகும் இந்தத் தீர்ப்பு ஒன்று நேரடியாக முதலமைச்சர் எடப்பாடி அரசாங்கத்தைப் பாதிக்கும். அல்லது, மறைமுகமாகப் பாதிக்கும். பாதிப்பு என்பதை சட்டக் காரணிகளைப் பொறுத்து சர்வ நிச்சயம் என்பதுதான் அரசியல் வட்டாரத்திலும் சட்ட வட்டாரத்திலும் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு. இதை அறுவடை செய்யக் காத்துக்கிடக்கிறது தினகரன் தரப்பு.

இந்த வழக்கின் தோற்றுவாயே மிக சுவாரஸ்யமானது, சூடானது.

அதுபற்றி ஒரு மீள் பார்வை பார்க்கலாம்...

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து தங்களது ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியபிறகு பிரதான எதிர்க்கட்சியான திமுக எப்படி சும்மா இருக்கும்? கடந்த ஆகஸ்ட்டிலேயே பெரும்பான்மையை இழந்துவிட்டார் எடப்பாடி. எனவே உடனடியாக திமுக தரப்பிலும் ஆளுநரைச் சந்தித்து, ‘பெரும்பான்மையை இழந்த அரசை சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

ஆனால், ஆளுநரிடம் இருந்து எந்த சமிக்ஞையும் இல்லை. டெல்லியில் இருந்து வந்தால்தானே ஆளுநர் மாளிகையில் இருந்து வரும்? பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தே ஆளுநர் அமைதி காக்கும் நிலையில் திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இருந்த ஒரே வழி நீதிமன்றம்.

ஆளுநரை திமுக சந்தித்து முறையிட்டு சில நாள்கள் ஆன நிலையில்... அவரிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை அறிந்த ஸ்டாலின் அறிவாலயத்தில் திமுகவின் மூத்த முன்னோடி வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆளுநர்மீது வழக்குத் தொடர்வது என்பதுதான் அது,

அதாவது சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்பதே ஸ்டாலின் தொடுத்த வழக்கு. இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது... ஸ்டாலின் தரப்பில் ஆஜரான கபில் சிபல் அருணாசலப் பிரதேசத்தில் நடந்த ஜனநாயகக் குழப்பங்களைப் போன்று தமிழகத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டினார்.

அதோடு அன்று நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது.

அன்று (செப்டம்பர் 14) நடந்த இந்த வழக்கில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் தன்னையும் ஒரு பார்ட்டியாகச் சேர்த்துக் கொள்ள மனு செய்ததன் மூலம் இந்த வழக்கின் முக்கியத்துவம் மேலும் அதிகமானது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஸ்டாலின் தொடுத்த வழக்கில், ‘வரும் செப் 20ஆம் தேதி புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டார் நீதிபதி துரைசாமி.

“எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் 21 பேர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டனர். ஆனால், ஆளுநர் இதுவரை சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவில்லை. இதன்மூலம் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. எனவே, உடனடியாகத் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்பதுதான் ஸ்டாலின் தாக்கல் செய்த ரிட் மனுவின் சாராம்சம்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். அவர் தனது வாதத்தில்,

“தமிழக சட்டமன்றத்தின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வருக்கான தங்களது ஆதரவை வாபஸ் வாங்கி ஆளுநருக்குக் கடிதம் கொடுத்துவிட்டனர். அவர்கள் 19 பேரையும் தகுதிநீக்கம் செய்து அதன் பிறகு சட்டசபையைக் கூட்டி, சட்டத்தை வளைத்து மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிக்கிறார் முதல்வர். இதற்கு ஆளுநரும் துணை போகிறார்” என்று வாதாடிய கபில் சிபல் தன் வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அருணாசலப் பிரதேச சபாநாயகர் இதேபோல ஆட்சிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார்.

இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜர் ஆனார். அப்போது நீதிபதி துரைசாமி, “இன்று மதியம் 3 மணிக்குள் 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் சபாநாயகர் விசாரணைக்காக வரச் சொல்லியிருக்கிறார். இன்று 3 மணிக்குள் அந்த உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வீர்களா? அல்லது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார் என்பது பற்றி நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவியுங்கள்” என்று கேட்டு வழக்கை பிற்பகல் 2.15க்கு ஒத்தி வைத்தார்.

பின் நீதிமன்றம் கூடியதும் முதல்வருக்குத் தனியாக ஒரு வழக்கறிஞரும், ஆளுநருக்கு அட்வகேட் ஜெனரலும் ஆஜர் ஆனார்கள்.

அப்போது சபாநாயகரின் பதில் என்னவென்று கேட்டார் நீதிபதி. “இன்று அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் வருகிறார்களா என்பதை பொறுத்துதான் நடவடிக்கை இருக்கும். சபாநாயகர் சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை இருக்கும் என்பது பற்றி நீதிமன்றத்துக்கு உறுதியாக சொல்ல இயலாது என்று தெரிவிக்கிறார்” என்று சபாநாயகரின் பதிலாக அட்வகேட் ஜெனரல் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘’இந்த மனுவே உள் நோக்கம் கொண்டது. இதுபோன்ற மனுக்களை விசாரித்துச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது சில எதிர்பார்ப்புகளோடு அனுமானங்களோடும் தாக்கல் செய்யப்பட்ட இதுபோன்ற மனுக்களை நீதிமன்றம் ஊக்குவிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யம் அரங்கேறியது.

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் இந்த வழக்குக்கு இடையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். “இந்த வழக்கு நடைபெறும் நிலையில்தான் நான் உள்ளிட்ட முதல்வரை எதிர்க்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வரும் ஞாயிற்றுக்கிழமைக் காலை 8 மணிக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு அன்று காலை 10 மணிக்கே சபையைக் கூட்டுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அப்போது எங்களுக்கு நீதிமன்றத்துக்கு வருவதற்கு நேரம் கிடைக்காது. எனவே 48 மணி நேரம் அவகாசம்” என்றார்.

உடனே நீதிபதி, “அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்வீர்களா என்பதற்கும் பதில் இல்லை. சட்டமன்றத்தைக் கூட்டுவீர்களா என்பதற்கும் பதில் இல்லையே?” என்று அரசுத் தரப்பைப் பார்த்து கேட்க, அட்வகேட் ஜெனரல், ’’அனுமானங்களுக்குப் பதில் சொல்ல இயலாது. பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்” என்றார்.

இதையடுத்து நீதிபதி துரைசாமி, “உங்களுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தருகிறோம். ஆனால், வரும் 20ஆம் தேதி புதன்கிழமை வரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு உத்தரவிட்டார்.

எது நடக்கும் என்று சொல்லி வெற்றிவேல் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்தாரோ, அதை செப்டம்பர் 18ஆம் தேதி நடத்தியே விட்டது அரசுத் தரப்பு. ஆம்... சபாநாயகர் தனபால் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கையைப் பாய்ச்சினார்.

இதன்மூலம் உடனடியாக மேலும் 18 வழக்குகள் நீதிமன்றத்தில் உதயமாகின.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வெள்ளி 9 பிப் 2018