மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: தில்லிப் பேரரசுக்கு ஓர தேசங்களிலிருந்து ஒரு சவால்

சிறப்புக் கட்டுரை: தில்லிப் பேரரசுக்கு ஓர தேசங்களிலிருந்து ஒரு சவால்

கோர்கோ சாட்டர்ஜி

(தமிழில் வெளியாகியிருக்கும் தன்னுடைய நூலுக்கு கோர்கோ சாட்டர்ஜி எழுதிய முன்னுரை)

“எங்கள் குழந்தைகளின் சிரிப்பினூடாகவே எங்கள் பழிவாங்கல் இருக்கும்”

- பாபி சாண்ட்ஸ் (பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய புரவிஷனல் ஐரிஷ் ரிபப்ளிகன் ஆர்மியின் உறுப்பினர். பிரிட்டிஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தவர்)

இது என்னுடைய முதல் புத்தகம். நான் நீண்ட காலமாகவே எழுதிவருகிறேன். ஆனால், இதுவரை எந்த மொழியிலும் என்னுடைய எழுத்துகளை ஒரு நூலாக வெளியிட்டதில்லை. ஆனால், நெருக்கடி சூழ்ந்த இந்தத் தருணத்தில், தில்லியும் ஒன்றிய அரசாங்கமும் இந்தி – இந்து - இந்துஸ்தான் சக்திகளும் தொடுக்கும் தாக்குதல்களை இந்தி பேசாத இனங்களின் மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், என்னுடைய எண்ணங்களை ஒரு புத்தகமாகத் தொகுக்க வேண்டியது அவசியம் என்று நினைத்தேன். அதுவும் இந்த நெருக்கடியின் ஏதேனும் ஓர் அம்சத்தை மட்டுமல்ல; பல்வேறு அம்சங்களை விவாதிக்கும் ஒரு நூலாக அது இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

1965இன் தியாகிகள்

அதிலும், வேறு எந்த ஒரு மொழிக்கும் முன்னதாகத் தமிழில் இந்த நூல் முதன்முதலாக வெளிவருவது மிகவும் பொருத்தமுடையது. ஏனென்றால் 1965ஆம் ஆண்டின் தியாகிகளை நினைவேந்தி நிற்கும் தேசம் தமிழர்களுடைய தேசம். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தியாகிகளுக்கான எனது வீர அஞ்சலியே இந்தப் புத்தகம். ஆயுமேந்தாத அந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழியின் உரிமைக்காகப் போராடிய தியாகிகள் மட்டுமல்லர். அவர்கள் இந்தி அல்லாத மற்ற எல்லா தாய்மொழிகளின் உரிமைகளுக்காகவும் போராடியவர்கள். அவர்கள் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மட்டுமல்லர், இந்தப் பேரரசின் ஆதிக்கத்துக்குட்பட்ட நமது மொழிசார் தாயகங்களின் பல்வேறு உரிமைகளுக்காகப் போராடிய தியாகிகள். அந்தத் தியாகிகளை போற்றி வணங்குகிறேன். நான் ஒரு வங்காளி, இந்திய ஒன்றியத்தின் இந்தி பேசாத குடிமகன், இந்த உலகுக்கு உலகத் தாய்மொழி நாள் என்னும் பிப்ரவரி 21-ஐ அளித்த ஒரு மொழியைப் பேசுகிறவன். என்னுடைய மொழிக்கும் அதற்கென சொந்தமாகத் தியாகிகள் உண்டு. ஆனாலும் 1965இன் தியாகிகள் எங்களுடைய தியாகிகளும்கூட.

உண்மையில், இப்படி ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. ஆனால், எழுத வேண்டிவந்தது. கருப்பின தேசியவாதி அஸ்ஸாதா ஷகூர் பின்வரும் சொற்களைச் சொன்னபோது என்ன நினைத்திருப்பாரோ அதையே இப்போது நானும் நினைக்கிறேன்: “நான் போரினை வெறுக்கிறேன். ஆனால், வாழ்க்கை வெறும் போராட்டமாக இருப்பதையும் வெறுக்கிறேன். போர் தேவையே இல்லாத உலகமொன்றில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி இல்லையே! போரை உண்மையிலேயே வெறுக்கிறேன். இந்தப் போராட்டச் சூழல், ஒரு போர் வீரனாக இருப்பது, போராடிக் கிடப்பது – இதெல்லாம் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என் மீது திணித்த ஒன்றுதான். இல்லையென்றால் நான் ஒரு சிற்பியாகவோ, தோட்டக்காரியாகவோ, தச்சராகவோ இருந்திருப்பேன் – பாருங்களேன், எதை வேண்டுமானாலும் நான் செய்திருக்க முடியும்தானே. நான் முழுமையான போராளி அல்ல, தயக்கமுள்ள போராளி, தயங்கித் தயங்கி போராடுகிறவள், போராட்டமே வாழ்க்கை என்றிருப்பவள் அல்ல... நான் போராடுகிறேன், வேறு வழியில்லை... ஏனென்றால் நான் வாழ்ந்தாக வேண்டும்...”

ஒரு சிலர் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் பிறந்த நாட்டில் அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாந்தர மூன்றாந்தரக் குடிமக்களாக இல்லை. ஆனால், அவர்களில் ஒருவனாக நான் இல்லை. தில்லியின் இந்திப் பேரரசில் நான் ஒரு இந்தி பேசாத ஒருவன். நான் போராடியாக வேண்டும். என் தமிழ் உடன்பிறப்புகளாகிய நீங்கள் போராடியாக வேண்டும். இந்தி பேசாத குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவருமே போராடியாக வேண்டும். நமக்கு வேறு வழி இல்லை. நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது குழந்தைகளின் சிரிப்புக்கு நாம் உத்தரவாதமளிக்கக்கூடியவர்களாக அந்தக் கடமை நமக்கு இருக்கிறது. நமது மறைந்த முன்னோர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே நான் எழுதுகிறேன், பேசுகிறேன், செவிமடுக்கிறேன். எனது எல்லாத் தமிழ் சகோதர சகோதரிகளும் எழுத வேண்டும், செவிமடுக்க வேண்டும், பேச வேண்டும். தங்களுடைய தாயகத்தில் அவர்கள் முதல்தரக் குடிமக்களாக ஆகும்வரை, அவர்களுடைய தலையெழுத்தை அவர்களே கட்டுப்படுத்தும் காலம் வரும்வரை, இந்தி ஏகாதிபத்தியம் நொறுக்கித் தகர்க்கப்படும்வரை அவர்கள் அதை நிறுத்தவே கூடாது. தமிழ் விவசாயிகள் தங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இன்னும்கூட தில்லிக்குச் செல்கிறவரை, தங்கள்மீது கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அவமானகரமான முறைகளைப் பின்பற்றுகிற நிலைமை இருக்கிறவரை தமிழ்ச் சகோதரர்களும் சகோதரிகளும் சும்மா இருக்க முடியாது. யாருடைய கவனத்தைத் தமிழ் விவசாயிகள் ஈர்க்க விரும்பினார்கள்? எந்த நாடாளுமன்றத்தின் குழுக்களில் தமிழைப் பயன்படுத்துவது சட்ட விரோதமோ அந்த நாடாளுமன்றத்தின் கவனத்தையா?

தமிழர்கள் சும்மா இருக்க முடியாது

தனது கடல், கடலோர விவகாரங்களில் இலங்கையுடனான தனது உறவைத் தானே தீர்மானிக்கக்கூடிய உரிமை இன்று இல்லாத நிலையில் அவ்வுரிமையைப் பெறும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. தமிழர்களின் சொந்த வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பரிசோதனை செய்வதற்காக சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் பேரரசிய எஜமானர்கள் நுழைவதற்குத் தடைபோடும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. நீட்டைத் தங்கள் நிலத்திலிருந்து தூக்கியெறியும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. அனிதாவுக்கு நீதி கிடைக்கும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடமே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. தங்களின் விதிக்குத் தாங்களே எஜமானர்கள் என்கிற நிலையை எட்டும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. இந்தி என்கிற மொழியின் இந்திப் பேரரசின் கலாசாரத்தின் அடிமைகளாக இருக்கும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஒரு பைசாகூட தமிழ்நாட்டிலேயே இருத்திவைக்கப்பட வேண்டுமே ஒழிய, இந்தி பேசும் மாநிலங்களுக்காக வாரி வழங்கப்படக் கூடாது என்கிற நிலை வரும்வரை தமிழர்கள் சும்மா இருக்கமுடியாது. தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. சும்மா இருக்கக் கூடாது. இந்த நூல் தமிழர்களிடமும் வங்காளிடமும் கன்னடர்களிடமும் பேச விரும்புகிறது. மற்றவர்களிடமும்கூட. நாம் சும்மா இருக்க முடியாது, கூடாது என்பதைச் சொல்ல விரும்புகிறது. தங்களைப் பீடித்திருக்கும் சங்கிலிகள் உடைபடும்வரை அடிமைகள் சும்மா இருக்க முடியாது.

என்னுடைய களக் குறிப்புகள் அல்லது பார்வைகளின் தொகுப்பே இந்த நூல். இந்தி – இந்து - இந்துஸ்தான் பேரரசின் பலிகடாவாக உள்ள ஒருவரின் பார்வை இந்த நூல். உடல்பருத்த, குட்டையான, தலைசொட்டை விழுகிற, அரிசிச் சோறு சாப்பிடுகிற வங்காள பலிகடாவின் பார்வை. அந்த வங்காளி உங்கள் சகோதரன். உங்கள் சகோதரனுக்கு உங்களிடம் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் உதவியை, நட்பை அவன் நாடுகிறான். நாம் ஒன்றுபட்டாக வேண்டும் என அவன் கூறுகிறான். அந்த அறைகூவல்தான் இந்தப் புத்தகம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018