மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ரயிலில் ஆயுதங்கள் : மாணவர்கள் வன்முறை!

ரயிலில் ஆயுதங்கள் : மாணவர்கள் வன்முறை!

மின்சார ரயிலில் கத்தி அரிவாளுடன் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பயணிகள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு இன்று (ஜனவரி 30) மதியம் 3 மணியளவில் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தை அடைந்ததும் அதில் பயணித்த மாணவர்கள் கத்தி அரிவாளுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுதங்களை வைத்திருந்த மாணவர்கள் மற்றொரு பெட்டியில் இருந்த மாணவர்களைத் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். பொதுமக்களையும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பீட்டர் காளிதாஸ் என்கிற மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் ஆயுதங்களை வைத்திருந்த மாணவர்கள் ரயில் நிலையத்தில் அங்கும் இங்குமாக அலைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் மாநில, பச்சையப்பன் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பஸ் டே, ரூட் தல என மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - திருவள்ளூர் – அரக்கோணம் வழியே இருக்கும் ரயில் நிலையங்கள் பாதுகாப்பற்றும், சிசிடிவி இல்லாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டிய பயணிகள் தங்கள் பயணத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்கதையாகும் சம்பவங்கள்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று (ஜனவரி 30) காலை 9 மணியளவில் ஆயுதங்களுடன் ஏறிய மாணவர்கள் மற்றொரு தரப்பு மாணவர்களைச் சரமாரியாக தாக்கினர். இதில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையம் இடையே ஓடும் ரயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். .

அக்டோபர் மாதம் 8ஆம் தேதி நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைத் தரையில் தேய்த்தபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக 4 கல்லூரி மாணவர்களைக் கைது செய்யப்பட்டனர்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

செவ்வாய் 30 ஜன 2018