மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

தானா சேர்ந்த கூட்டம் - ஸ்கெட்ச்: உண்மையில் வெற்றிப் படங்களா?

தானா சேர்ந்த கூட்டம் - ஸ்கெட்ச்: உண்மையில் வெற்றிப் படங்களா?

இராமானுஜம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களை முன்னிலைப்படுத்தவும், பிரபலப்படுத்திக்கொள்ளவும் மெனக்கெடுகின்றனர். தவறில்லை. ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் முயற்சிக்கும் சிக்கிக்கொண்டு தங்களை மட்டுமல்ல, பிறரையும் ஏமாற்றிவரும் போக்கு தொடர்கிறது.

ஜனவரி 12 அன்று ரிலீஸான படங்கள் வசூல் அடிப்படையில் வெற்றிப் படமா என்பதை உறுதிபடுத்தக் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர், அதனை வாங்கும் விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் கிடைத்தால் அது வெற்றிப் படம் எனக் கூற முடியும்.

படம் ரிலீஸ் ஆன ஐந்தாவது நாள் ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் ‘சக்ஸஸ் பிரஸ் மீட்’ நடத்தியுள்ளன. இதுபோன்று ஆடம்பரமாக வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்ட படங்கள் நஷ்டம் எனப் பின்னாளில் சந்தி சிரித்த கதை கோடம்பாக்கத்தில் ஏராளம். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகளான ரஜினி, விஜய் படங்கள் வெற்றி என்பதைக்கூட முதல் வாரத்தில் கணிக்க முடியாது. தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்துவந்த சூர்யா நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் இரு படங்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் சக்ஸஸ் பிரஸ் மீட் நிகழ்வுகள் சென்னையில் நடந்துள்ளன.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 32 கோடி ரூபாய்க்கு திருச்சி பரதன் பிலிம்ஸ் வாங்கி ஏரியா அடிப்படையில் பிரித்து 38 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

கடந்த ஏழு நாட்களில் தமிழ்நாடு மொத்த வசூல் 32கோடி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். இதில் கேளிக்கை வரி, GST பிடித்தம் போக எஞ்சிய 30 கோடியில் திரையரங்குகளின் வாடகை அல்லது பங்கு 30% கழிக்கப்பட்டால் 21 கோடி ரூபாய் நிகர வருமானம். 38 கோடிக்கு வியாபாரம் செய்து 21 கோடி பெற்றிருக்கும் நிலையில் எப்படி இதை வெற்றிப் படமாகக் கருத முடியும்? தெலுங்கில் இந்தப்படம் கல்லா கட்டியிருந்தாலும், தமிழகத்தில் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவது நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குத் தெரியுமா என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

தமிழ் சினிமாவில் தியேட்டர் டிக்கெட் விற்பனை, வியாபாரம், நடிகர்கள் சம்பளத்தில் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும் என சினிமா விழா மேடைகளில் முழக்கமிடுவது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாடிக்கை. அவரது தயாரிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றிப்படம் என்றால், படத்தின் தயாரிப்பு செலவு, வியாபாரம், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் திரையரங்குகளில் வசூலான தொகை, போன்ற தகவல்களைப் பொதுவெளியில் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுக் கொண்டாடியிருக்க வேண்டும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஞானவேல் ராஜாவுக்கு லாபம் என்பது உண்மை. விநியோகஸ்தர்களோ தாங்கள் கொடுத்த விலையில் லாபம் வேண்டாம், நஷ்டமின்றித் தப்பிக்க முடியுமா எனப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை என்கிறது விநியோக வட்டாரம்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தைப்போல, விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் வியாபாரமாகவில்லை. விநியோக அடிப்படையில் தயாரிப்பு தரப்பு ரிலீஸ் செய்த இப்படத்தின் வெற்றி தோல்வி தயாரிப்பாளரையே சார்ந்தது. இருமுகன் வெற்றிக்கு பின் வெளிவந்த ஸ்கெட்ச் முதல் வார முடிவில் சுமார் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சுமார் 8 கோடி ரூபாய் நிகர வருமானம் மட்டுமே கிடைக்கும். இது விக்ரம் சம்பளத்தை விடக் குறைவு.

நிலைமை இப்படி இருக்க, படம் சக்ஸஸ் என்று மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது நடிகர்கள் சம்பளத்தை அதிகரிக்கக் காரணமாகிவிடும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் இரு படங்களின் முதல் வார வசூல் கணக்குப்படி நஷ்டம் உறுதி. திங்கட்கிழமையிலிருந்து பெரும்பான்மையான தியேட்டர்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் டிக்கெட் விற்பனை உள்ளது என்கிறது தியேட்டர் வட்டாரத் தகவல்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வெள்ளி 19 ஜன 2018