மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

இரவோடு இரவாக...

 இரவோடு இரவாக...

பூரி உலகநாயகன் கோயிலில் மன்னன் உட்பட ராமானுஜரின் சிஷ்யர்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர். அதிகாலை நேரத்திலேயே மன்னன் வந்துவிட்டான். பூஜை வழிபாட்டு முறையை மாற்றுவதற்காக ராமானுஜருக்கு ஆதரவு தெரிவித்த பலரும் திரண்டிருந்தார்கள்.

அதேநேரம் இந்த முறையை எதிர்த்துக் கொண்டிருந்த அந்த கோயிலின் பாரம்பரிய அர்ச்சகர்களும் திரண்டனர். அங்கே எந்த கணமும் ஒரு மோதல் ஏற்படும் சூழல் ஆரம்பமானது. ஏனென்றால் சீர்திருத்தத்துக்கும் மாற்றத்துக்கும் மன்னன் தயாராக இருக்கிறான். ஆனால் ராமானுஜனையும் மன்னனையும் சேர்த்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் கோயிலின் பாரம்பரிய ஊழியர்கள். மன்னனுக்கு ஆதரவாக கோயிலுக்கு பாதுகாப்பு அளிக்க சிப்பாய்களும் திரண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் ராமானுஜரை காணவில்லை. ராமானுஜர் உடல் சோம்பல் இல்லாதவர். ஒவ்வொரு நாளும் நேரத்தை எவ்வாறு கணக்கெடுத்து செலவழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர். சீடர்களுக்கு அமர்ந்திருக்கும்போது எந்த விஷயங்களை போதிக்க வேண்டும், பயணத்தில் நடந்துகொண்டிருக்கும்போது எந்த விஷயங்களை போதிக்க வேண்டும் என்ற தெளிவெல்லாம் ராமானுஜரிடத்திலே உண்டு.

அதாவது நாம் ஒரு விஷயத்தை அமர்ந்து கவனிக்கும்போது கொஞ்சம் கடினமான விஷயங்களாக இருந்தால் கூட அதை கிரகித்துக் கொள்வதற்கான தன்மையில் நமது மூளை இருக்கும். அதேநேரம் நாம் பயணத்தில் இருக்கும்போது, கொஞ்சம் லேசான விஷயங்களை இசை வடிவிலான விஷயங்களை கிரகித்துக் கொள்வது எளிது. இந்த உளவியலை அப்போதே நன்கு அறிந்தவர் ராமானுஜர். அதனால் அவர் தனது சிஷ்யர்களுடன் பயணத்தில் இருக்கும்போது பொதுவாக பிரபந்தங்களை பாடிக் கொண்டு இசையோடு பாடிக் கொண்டு அதை அவர்களையும் பாட வைத்து பயணம் மேற்கொள்வார். இப்படியான நேரத்தின் அருமை மட்டுமல்ல, நேரத்தின் தன்மையும் ராமானுஜருக்குத் தெரியும்.

காலத்தை இப்படி நேர்த்தியான கணக்கீடாக வைத்திருக்கும் ராமானுஜர் மன்னனிடம் சூரிய உதயத்துக்கு முன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் பதை பதைத்தனர். மன்னன் தனது சிப்பாய்களை அனுப்பி கோயில் வாசலில் இருக்கும் எம்பார் மடத்தில் போய் பார்த்துவர சொன்னான்.

அவர்கள் போய் பார்த்தால் எம்பார் மடத்தில் யாருமில்லை... வாசலில் நின்று கூப்பிட்டுப் பார்த்தார்கள். குரலுக்கு பதில் குரல் இல்லை. தயங்கித் தயங்கி உள்ளே சென்று பார்த்தார்கள். உள்ளே ராமானுஜரோ அவரது சிஷ்யர்களோ யாரும் இல்லை. ராமானுஜர் எம்பார் மடத்திலேயே இல்லை.

இது ராமானுஜரின் இயல்புக்கு முரணாக உள்ளதே... ராமானுஜர் இதுவரைக்கும் பல்வேறு இடங்களில் தனது நிலைப்பாட்டை வெற்றிகரமாக நிலைநாட்டிவிட்டு வெற்றியோடுதானே விடைபெற்றிருக்கிறார். இப்படி மர்மமாக இரவோடு இரவாக ராமானுஜர் விடைபெற்றுச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.

அப்படி என்றால் ராமானுஜர் எங்கே?

இந்த இடத்தில்தான் இரண்டு விஷயங்கள் எழுதப்படுகின்றன, சொல்லப்படுகின்றன. நாம் இரண்டையுமே பார்த்துவிடுவது நல்லது.

ராமானுஜர் ஆகமத்தை மாற்ற நினைத்தார். ஆனால் அந்த அர்ச்சகர்களில் ஒருவரே ராமானுஜரிடம் தனியாக வந்து, ‘உமது மாற்றம் என்பது வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால் எங்களுக்கு இந்த கோயிலில் இருந்து பாத்தியம் இல்லை என்று ஆகிவிட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. உங்கள் ஆகமம் எங்களின் சாகமம் ஆகிவிடக் கூடாது. மேலும் எங்கள் தரப்பில் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கையும் இறைஞ்சலுமாய் சொல்லியிருக்கலாம் என்று ஒரு பக்கம் கருதப்படுகிறது.

இன்னொரு பக்கம் ராமானுஜரை பூரி ஜெகநாதரே அழைத்து, ‘அவர்கள் ஏதோ பண்ணுகிறார்கள். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று ராமானுஜரிடமே வேண்டுகோள் வைத்ததாக குருபரம்பரைக் குறிப்புகள் பகர்கின்றன.

சரி எம்பார் மடத்தில் ராமானுஜரை காணோம். அவர் எங்கே போயிருப்பார்?

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் வெளிச்ச வைபவங்கள் மூலம் தமிழையும் வைணவத்தையும் உலகமெல்லாம் ஓதிப் பரப்பும் அருந்தொண்டர் ஜெகத்ரட்சகன் அவர்களின் சேவை மார்கழி பனியாய் அடர்ந்து தொடர்கிறது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon