மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

வைரமுத்து மீது வழக்குப்பதிவு!

வைரமுத்து மீது வழக்குப்பதிவு!

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாகக் கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் எழுதப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாகத் தகவல் வெளியானது.

இது குறித்து வைரமுத்து, “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன், என்னுடைய கருத்தால் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்" என்று விளக்கமும் அளித்துவிட்டார்.

ஆனால் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வைரமுத்து மீது தனிப்பட்ட முறையில் அவதூறு வார்த்தைகளால் தாக்குதல் தொடுத்தார். வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், ராஜாவைக் கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கவிஞர் வைரமுத்து மீது இந்து முன்னணி நகரச் செயலாளர் சூரி என்பவர் ஆண்டாளைக் கொச்சைப்படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வைரமுத்து மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் முருகானந்தம் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திலும் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனி, 13 ஜன 2018

அடுத்ததுchevronRight icon